TamilsGuide

குறைந்தபட்ச ஊதியம் - ஜேர்மனியில் ஏமாற்றப்படும் லட்சக்கணக்கான பணியாளர்கள்

germany workers get less than minimum wage: ஜேர்மனியில், குறைந்தபட்ச ஊதியம் பெறும் நிலையிலுள்ள பணியாளர்களில் சுமார் 20 லட்சம் பேர் ஏமாற்றப்படுவதாக தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில், சுமார் 60 லட்சம் குறைந்தபட்ச ஊதியம் பெறும் நிலையிலுள்ள பணியாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களில் 20 லட்சம் பேருக்கு குறைந்தபட்ச ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்கிறது ஜேர்மன் தொழிலாளர்கள் யூனியன் கூட்டமைப்பு.

ஒரு பணியாளருக்கு குறைந்தபட்சம் இவ்வளவு ஊதியம் வழங்கப்படவேண்டும் என சட்டம் கூறும்நிலையிலும், சுமார் 20 லட்சம் பேருக்கு அந்த அளவுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லையாம். 

அதேபோல, பல இடங்களில் பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் நிலையில், அதற்கான ஊதியமும் வழங்கப்படுவதில்லையாம்.

பணியாளர்களை, பயிற்சி செய்பவர்கள் என போலியாக குறிப்பிட்டு ஏமாற்றுவதும் நடக்கிறதாம்.

குறிப்பாக, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் இந்த மோசடி நடக்கிறதாம். 

புதிதாக ஜேர்மனிக்கு வருவோரும், புலம்பெயர்ந்தோரும், மொழிப்பிரச்சினை மற்றும் உள்ளூர் தொழிலாளர் சட்டம் குறித்து தெரியாததால், அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்களாம்.

அவ்வப்போது அதிகாரிகள் சோதனையிட வந்தாலும், புகாரளித்தால் வேலை போய்விடுமோ என பயந்து பணியாளர்கள் புகாரளிப்பதில்லையாம்.

இந்நிலையில், இப்படி சரியாக குறைந்தபட்ச ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதால், பணியாளர்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய ஊதியம், காப்பீடு முதலான விடயங்களுக்கு செல்லவேண்டிய தொகை மற்றும் வரி மூலம் செலுத்தப்படவேண்டிய தொகை என 10 ஆண்டுகளில் சுமார் 64 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment