TamilsGuide

ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதி புனரமைப்பு இறுதிக்கட்டம்

ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதியை இருவழிப்பாதையாக அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஒரு பகுதியாக, கபேல்லவத்த பகுதியில் அமைந்திருந்த பழைய கல் பாலம் தொடர்பான புனரமைப்புப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துடன் இணைந்ததாக ரம்புக்கனை–மாவனெல்ல பிரதான வீதியை இருவழிப்பாதையாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் காணப்பட்ட பழைய கல் பாலத்தை அகற்றி புனரமைப்பு செய்வது அவசியமாகியிருந்தது.

ரயில் சேவை இடம்பெறாத காலப்பகுதியை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன.

அகற்றப்பட்ட பழைய கல் பாலத்துக்குப் பதிலாக, அதனை ஒத்த வடிவமைப்பிலான புதிய கல் பாலமொன்றை அருகிலுள்ள பகுதியில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் பாலத்தின் ஊடாக ரயில் சேவையையும், புதிய பாலத்தின் ஊடாக வாகனப் போக்குவரத்தையும் மீள ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment