TamilsGuide

மன்னார் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (12) பிற்பகல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் ஆரம்பத்தில், முன்னைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்டத்திலுள்ள மீனவ சங்கங்களின் சமாசங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளுடனும் மீனவ பிரதிநிதிகளுடனும் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கலந்துரையாடலின் நோக்கம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் விளக்கமளித்தார். இதன்போது மன்னார் மாவட்டத்தின் கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மன்னார் கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து அடித்தள இழுவை முறையில் மீன்பிடிப்பதால் கடல் வளங்களும், மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக பவளப்பாறைகள், கடற்புல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் இயற்கை வாழிடங்கள் அழிக்கப்படுவதாகவும், திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அந்நாட்களில் உள்ளூர் மீனவர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்திய இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய இழுவைப் படகுகள் தொடர்பில் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், எனினும் இவ்வாறான நடவடிக்கைகளால் கடல் வளங்களும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளும் பாதிக்கப்படுவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கை விடுதிகள்

இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மன்னார் மாவட்டத்தில் முறையான மீன்பிடித் துறைமுகம் இல்லாததால், கடுமையான காலநிலையின்போது மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், பலநாள் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதி அவசியம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்படும் இந்திய இழுவைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்குக்கூட போதுமான வசதி இல்லாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மன்னாரில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பினால் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சிலாபத்துறை பகுதியில் நங்கூரமிடும் தளம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறு தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், உள்ளூர் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அதிகாரிகள் ஊடாக சாத்தியக்கூறுகளை முறையாக ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் பல கடற்கரைப் பகுதிகளில் கடலரிப்பு தீவிரமடைந்துள்ளதால் மீன்பிடி இறங்குதுறைகள், கடற்கரைப் பாதைகள் மற்றும் மீனவர்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளுக்குள் கடல்நீர் உட்புகும் நிலையும் காணப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக தலைமன்னார் பியர், உப்புக்குளம்–ஜனதாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாக உள்ளதாகவும், மொத்தம் 13 இடங்கள் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கச்சத்தீவில் மீனவர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு முறையான அனுமதி மற்றும் ஏற்பாடுகள் தேவைப்படுவதாகவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பில் அமைச்சர் கடற்படையினரிடம் விளக்கம் கோரியபோது, கச்சத்தீவில் பாதுகாப்பு தொடர்பான சில பிரச்சினைகள் காணப்படுவதாக கடற்படையினர் தெரிவித்தனர். எனினும், இவ்விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் உரிய பதில் வழங்கப்படும் என கடற்படையினர் தெரிவித்தனர்.

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 72 மீனவர்களுக்கு Purse Seine வலை மூலம் மீன்பிடிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் அனுமதிகளின் எண்ணிக்கை 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக இம்முறையில் மீன்பிடித்து, அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அனுமதி கிடைக்காத மீனவர்களும் தங்களுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இந்த விடயம் தொடர்பில் சாதகமான பதிலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மன்னார் மாவட்டத்தின் ஏனைய மீன்பிடிப் பிரிவுகள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூர் இழுவைப் படகுகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இழுவை மீன்பிடி காரணமாக பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்படுதல், மீன்பிடி உபகரணங்கள் சேதமடைதல் மற்றும் மீனவக் குழுக்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பிலும் மீனவர்கள் தமது கவலைகளை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இதற்கு மீனவ சமூகத்தினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், கடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment