யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஆடி அமாவசை தினமான இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டப்பட்ட குப்பைகளால் ஏற்படும், சூழல்சார், சமூகம்சார் பிரச்சனைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டு துண்டுபிரசுரங்களை வழங்கி வைத்திருந்தார்.


