TamilsGuide

கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரிக்கை - 29,000 கனேடியர்கள் ஆதரவு

கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகிப்பவர், பீற் ஹோக்ஸ்ட்ரா ( Pete Hoekstra).

இந்நிலையில், பீற் ஹோக்ஸ்ட்ராவை விரும்பத்தகாத நபராக அறிவிக்கவேண்டும் (Persona non grata declaration) என்றும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் கோரும் புகார் மனு ஒன்று கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், 29,000க்கும் அதிகமான கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கனடா - அமெரிக்கா தூதரக உறவைச் சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணாகக் கனேடிய அரசியல் விடயங்களில் மீண்டும் மீண்டும் தலையிட்டதாகவும் ஹோக்ஸ்ட்ரா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடா விவகாரங்களில் அமெரிக்காவின் தூதரகத் தலையீட்டை மறுஆய்வு செய்ய, ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்க லிபரல் அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைத்துக்கொள்வது குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை ஹோக்ஸ்ட்ரா இயல்பான விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அந்த மனு கூறுகிறது.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள Persona non grata declaration என்பது என்னவென்றால், 1961ஆம் ஆண்டு அறிமுகமான தூதரக உறவுகள் தொடர்பிலான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவு 9இன்படி, தனது நாட்டுக்கான மற்றொரு நாட்டின் தூதரையோ அல்லது ஒரு வெளிநாட்டவரையோ, ஒரு நாடு, அவருக்கு இங்கு வரவேற்பில்லை என பிரகடனம் செய்யலாம்.

அப்படி பிரகடனம் செய்யப்பட்டவருக்கு அதற்குப் பின் ஒரு தூதருக்கான பாதுகாப்பு வழங்கப்படாது என்பதுடன், அவரை, அந்த நபரின் சொந்த நாடு திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment