நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாகப் பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினாரென நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்குப் பரிந்துரைகளை அனுப்பி வைத்துள்ளது.
சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரது காணிக்கு முன்பாக உள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த 2026 மார்ச் 04 ஆம் திகதி பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில், அவரது காது கடிக்கப்பட்டுப் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும், பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டிச் சந்தேகநபருக்கு ஆதரவாக நடந்துகொண்டதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘United Human Rights Organization’ அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட HRC/HAT/58/26/N என்ற முறைப்பாட்டை விசாரணை செய்த ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் அதிகாரிகளின் பாரபட்சமான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி கடந்த ஜூலை 31 அன்று பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
சம்பவம் நடந்து 6 மாதங்கள் நெருங்கியும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய, அரச அதிகாரிகள் மத பாகுபாடின்றி வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகளை நடத்திப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


