World’s Longest Hair: Indian Woman Sets a New Record -உலகிலேயே மிக நீளமான கூந்தலைக் கொண்ட வாழும் பெண் என்ற பெருமையைப் ரேணு பெற்றுள்ளார்.
நீண்ட கூந்தல் என்றாலே அழகு, பாரம்பரியம், பெண்மையின் அடையாளம் எனப் பல்வேறு எண்ணங்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால், உத்தரகாண்டைச் சேர்ந்த ரேணு தரியலுக்கு அவரது நீண்ட கூந்தல் தற்போது உலக சாதனையையே பெற்றுக்கொடுத்துள்ளது.
அவரது கூந்தலின் நீளம் 271.50 சென்டிமீட்டர் (8 அடி 10 அங்குலம்) என அளவிடப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைப் பிரதிநிதிகள் இந்தச் சாதனையை அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம், உக்ரைனைச் சேர்ந்த அலியா நசிரோவா கடந்த காலத்தில் படைத்திருந்த 257.33 சென்டிமீட்டர் என்ற சாதனையை ரேணு முறியடித்துள்ளார் என தெரிவிக்கப்டுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகாண்டின் ஹல்த்வானியில் கின்னஸ் உலக சாதனைப் பிரதிநிதிகள் ரேணுவின் கூந்தலை நேரடியாக அளந்து, அதன் நீளத்தை அதிகாரப்பூர்வமாகச் சரிபார்த்தனர்.
இந்தியக் கலாச்சாரத்தில் நீண்ட கூந்தல் என்பது வெறும் அழகின் அடையாளம் மட்டுமல்ல; அது பாரம்பரியத்துடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதுவே தனக்கு உத்வேகமாக இருந்ததாக ரேணு தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தனது தலைமுடியை வெட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இன்று அந்த முடிவு அவரை உலக சாதனையாளராக மாற்றியுள்ளது. தரையைத் தொட்டபடி நீளமாகப் பரந்து கிடக்கும் அவரது கூந்தலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் ரேணுவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வளவு நீளமான கூந்தலை வளர்ப்பது எவ்வளவு சிரமமோ, அதைப் பராமரிப்பதும் அதைவிடப் பெரிய சவால்தான். உள்ளடக்க உருவாக்குநரும் யூடியூபருமான ரேணு, தனது கூந்தலைப் பராமரிப்பதில் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து வருகிறார்.
தலைமுடியைக் கழுவுவது, பின்னர் அதிலுள்ள சிக்கல்களை நீக்குவது என ஒவ்வொரு பணிக்கும் பல மணி நேரங்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது யூடியூப் சேனல் வாயிலாக, வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கையான கூந்தல் எண்ணெய்கள், ஷாம்புகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு முறைகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


