எம்.ஜி.ஆரை ரிக்க்ஷா ஓட்டுநர் கள் நன்றியுடன் வணங்கினர்.
சினிமா
சென்னையில் மழை பாதிப்பு நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டில் பெரிய, பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கப்படும். பொட்டலங்களாக கட்டி கொடுக்கப்பட்டால் அவை சூடு ஆறி விடும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வேன்களி லும் கார்களிலும் உணவு எடுத்துச் செல்லப்பட்டு சூடாக வழங்கப்படும். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு பரிமாறியதும் உண்டு.
ஒருமுறை, வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆற்காடு சாலையில் காரில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டில் நட்சத்திரங்களின் கார்கள் காத்து நிற்கும். அவர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் அங்கு ஒரு கூட்டம் இருக்கும்.
கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆரின் கார் காத்திருந்தது. அப்போது, நல்ல மழை பெய்து கொண் டிருந்தது. ரிக் ஷாக்காரர் ஒருவர் மழை யில் நனைந்து கொண்டே முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தபடி இருந்தார். இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்தது.
தனது அண்ணன் சக்ரபாணியிடம் ரிக்ஷாக்காரரின் நிலைமையைச் சொல்லி எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார். சக்ரபாணியும் பரிதாபப்பட்டார். அவர் இயல்பாகவே கொஞ்சம் வேடிக்கையாக பேசக் கூடியவர். ‘‘பாவம்தான். ஆனால், அதற்காக ரிக்ஷாக்காரர்கள் ரெயின் கோட் போட்டுக் கொண்டா ரிக் ஷாவை ஓட்டுவார்கள்?’’ என்று கேட்டார்.
மழைக்கு பதில் சொல்வது போல, எம்.ஜி.ஆரின் மூளையில் மின்னல் அடித்தது. ‘‘ஏன் கூடாது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்ட தருணம்தான், ரிக் ஷாக்காரர்களுக்கு இலவசமாக அவர் ரெயின் கோட் வழங்குவதற்கான திட்டம் உதித்த நேரம். உடனடியாக, எம்.ஜி.ஆர். செயலில் இறங்கிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். ‘‘சென்னையில் எவ்வளவு ரிக் ஷாக் காரர்கள் இருப்பார்கள்? அவ்வளவு பேருக்கும் ரெயின் கோட் தைக்க எவ்வளவு செலவாகும்? விசாரித்து சொல்லுங்கள்’’ என்று கூறினார்.
தொப்பியுடன் கூடிய பிளாஸ்டிக் மழைக் கோட்டுகள் வாங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா. 5,000-க்கும் மேற்பட்ட ரிக்க்ஷாக்காரர்களுக்கு எம்.ஜி.ஆர். செலவில் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன. அண்ணாவின் அருகே புன்னகையுடன் நின்ற எம்.ஜி.ஆரை ரிக்க்ஷா ஓட்டுநர் கள் நன்றியுடன் வணங்கினர்.
( படம் :ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பின் போது )
Chandran Veerasamy






















