TamilsGuide

கனடாவில் ஹெலிகொப்டர் விபத்து - 3 பேர் லேசான காயங்களுடன் மீட்பு

கனடாவின் 'நார்த்வெஸ்ட் டெரிட்டரீஸ்' பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யெல்லோநைஃப் நகருக்கு வடமேற்கே சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'கமேட்டி' பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்து சுமார் மூன்று மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஹெலிகொப்டரில் இருந்த மூன்று பேரும் கண்டுபிடிக்கப்பட்டு லேசான காயங்களுடன் உள்ளூர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் உதவிகளை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வாளர்கள் இதுவரை விவரங்களை வெளியிடவில்லை.

எனினும், விபத்து தொடர்பில் மேல் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 

Leave a comment

Comment