TamilsGuide

Big Boss தமிழ் சீசன் 10 - புதிய logo வெளியீடு

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பிக் பாஸ் தமிழ் சீசன் 10' நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, 'கார்னி விழா' என்ற புதிய தீமுடன் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த 10-வது சீசன் வெறும் போட்டியாக மட்டுமில்லாமல், ஊரே சேர்ந்து கொண்டாடும் நூறு நாள் திருவிழாவாக அமையவுள்ளது. வண்ணமயமான செட்டிங்குகள், மக்கள் கொண்டாடும் பாடல் வரிகள் ஆகியவற்றுடன் இந்த சீசன் தொடங்குகிறது.

"மக்கள் அனைவருக்கும் பத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லா சீசனும் கெத்து.. இப்போ இது சீசன் பத்து" என்ற வரிகள் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10 ஆண்டுகால வெற்றிகரமான பயணம் இந்த ப்ரோமோவில் பெருமையோடு நினைவுகூரப்பட்டுள்ளது.

கடந்த சீசனைப் போலவே, இந்த மைல்கல் பத்தாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான அவதாரத்தில் தொகுத்து வழங்குகிறார்.

ப்ரோமோவின் இறுதிக் காட்சியில், ஒரு அசத்தலான திருவிழா பின்னணியில் கூலிங் கிளாஸ் அணிந்து மாஸாகத் தோன்றும் அவர், "இங்க ஒன்னு நினைச்சா... பத்து நடக்கும்" என்ற அதிரடி பஞ்ச் லைனைப் பேசி, இந்த சீசனில் வரப்போகும் பல நூதனமான ட்விஸ்டுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

வழக்கமான பிக் பாஸ் சுவாரசியங்களான காலை நேர வேக்கப் பாடல்கள், மாலை நேரக் கொண்டாட்டங்கள், ரூஃப் சாட்டில் நடக்கும் சண்டைகள் மற்றும் விறுவிறுப்பான ப்ரோமோக்கள் என அனைத்தும் இந்த சீசனிலும் தொடர்கின்றன.

மேலும், "பிடித்த போட்டியாளர்களைக் காப்பாற்ற தேங்காய் உடைப்பது", "டாஸ்க்குகளை முடிக்காவிட்டால் எவிக்சன் பூஜை நடப்பது", மற்றும் "24 மணி நேரமும் ரசிகர்கள் தொடர்ந்து நேரலையாகப் பார்த்து இணையத்தில் எவிக்சன் கணிப்புகளைச் செய்வது" என பிக் பாஸ் ரசிகர்களின் அன்றாட வாழ்க்கை முறையே இந்த ப்ரோமோ பாடலில் சுவாரசியமாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

"பிக் பாஸ் சீசன் 10 – விரைவில்..." என்ற அறிவிப்போடு இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இந்த பத்தாவது சீசன், முந்தைய சீசன்களை விட பல மடங்கு கூடுதல் சுவாரசியங்களுடனும், புதிய விதிகளுடனும் இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
 

Leave a comment

Comment