இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.
செயலிழந்த கணினி அமைப்பு இயல்பு நிலைக்கு சரிசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பயண ஆவணங்களை விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த கோளாறு காரணமாக அவசரமாக பயண ஆவணங்கள் தேவைப்படும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை வழங்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவு மூலம், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய இரண்டின் கீழும் கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதமும் இதேபோன்று கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டு, பின்னர் அது வழமைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


