TamilsGuide

வடகொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாது! ஜெலென்ஸ்கி காட்டம்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யா தீவிரமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வரலாற்றிலேயே முதல் முறையாக வட கொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த அபாயகரமான கூட்டணி உலக நாடுகளுக்கு மிகவும் பேராபத்து என்று சுட்டிக்காட்டினார்.

அத்துடன் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போரில் வட கொரிய வீரர்களும் மற்றும் ஏவுகணைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் மூலம் அவர்கள் நேரடியாக போர் அனுபவங்களை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களை சரிசெய்து கொண்டு மிக ஆழமான ராணுவ அனுபவங்களை பெறுவதாக எச்சரித்துள்ளார்.

இந்த அனுபவம் எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும், வட கொரியாவின் இலக்குகளை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Leave a comment

Comment