TamilsGuide

ஆகஸ்ட் 14-ல் வெளியாகிறது சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் - ஆகஸ்ட் 11 முதல் முன்பதிவு துவக்கம்

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இத்திரைப்படத்திற்கான முன்பதிவுகள் நாளை, ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 6:00 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது எனப் படக்குழு புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இன்று படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், நடிகர் சூர்யா ஒரு பச்சிளம் குழந்தையைத் தனது கைகளில் ஏந்தியபடி மிகவும் பாசமான தந்தை தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

சூர்யாவின் முந்தைய ஆக்ஷன் மற்றும் மாஸ் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு எமோஷனல் மற்றும் ஃபீல்-குட் குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்பதை இப்போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா, 40 வயதுகளில் இருக்கும் சர்வதேச அளவிலான ஒரு துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீரராக 'சஞ்சய் விஸ்வநாத்' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து மனிதன், தனது விளையாட்டு லட்சியம் மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே சந்திக்கும் சவால்களையும், தந்தை-மகன் பாசத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் இருக்கும் என்று ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்தை கணித்து வருகின்றனர்.

தமிழில் தனுஷ் நடித்த 'வாத்தி' மற்றும் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.

சூர்யாவின் 'விண்டேஜ்' எமோஷனல் நடிப்பை மீண்டும் திரையில் கொண்டு வரும் வகையில் இதன் திரைக்கதையை அவர் அமைத்துள்ளார்.

'பிரேமலு' திரைப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் சூர்யாவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டும், வார இறுதி விடுமுறையை முன்னிட்டும் இப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாகிறது.

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்கு டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment