மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கத்தின் ஏற்பாட்டில் 2026 ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டி ஜயதிலக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் பாஸ்மின் ஷெரீப் கௌரவ அதிதியாகவும், கம்பளை சாஹிரா கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் M.A.M. மஸாஹிர் மற்றும் Western PVC Pvt Ltd நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஸாஹிர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். கம்பளை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இலங்கை பிரெஞ்ச் சவாட் கிக் பாக்ஸிங் தேசிய சம்மேளனத்தின் தலைவர் மாஸ்டர் பாரிஸ் மௌலானா உள்ளிட்ட தேசிய மற்றும் மாகாண சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும் போட்டியை சிறப்பித்தனர். இலங்கைவரைபடம்
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 145 ஆண் மற்றும் 30 பெண் வீரர்கள் என மொத்தம் 175 போட்டியாளர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கடுமையான போட்டிகளின் முடிவில் கண்டி மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றது. மாத்தளை மாவட்டம் இரண்டாம் இடத்தையும், நுவரெலியா மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
போட்டியை வெற்றிகரமாக நடத்த வைர அனுசரணையாளராக அல்ஹாஜ் ஸாஹிர், தங்க அனுசரணையாளராக அல்ஹாஜ் நஸார் உதயார் உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கினர். வெள்ளி மற்றும் பிற அனுசரணையாளர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.
அண்மைய சூறாவளியால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஒத்துழைத்த அதிகாரிகள், நடுவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள், பெற்றோர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் அனைவருக்கும் மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.


