TamilsGuide

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசை கடுமையாக சாடிய எதிர்கட்சித் தலைவர்

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்ற விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

அவர் மேலும் தெரிவிக்கயைில், "யார் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தாலும், தற்போதைய சிறைச்சாலை மோதல்களும் அசம்பாவிதங்களும் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.

சிறைச்சாலைகளில் இடம்பெறும் தொடர் அசம்பாவிதங்களைக் அடிப்படையாகக் கொண்டே நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம்.

எனினும், அந்த வாக்கெடுப்பில் அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு அரசு தன் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது.

ஆனால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹர சிறைச்சாலையிலும், தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும், தற்போது குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்துப் பிரச்சினைகள் வெடித்துள்ளன.

எனவே, இந்த விவகாரத்தில் அரசு எவ்வித அலட்சியமுமின்றி உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment