ஈரான் தொடர்பான மோதல் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்; அந்த இஸ்லாமியக் குடியரசால் "இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது" என்றும் அவர் கூறினார். ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் நம்பிக்கை தெரிவித்த அவர், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதில் உள்ள உறுதியையும் மீண்டும் வலியுறுத்தினார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரான் விவகாரத்தில் நான் மிக முக்கியமான நடவடிக்கையை தொடங்கியபோது, அது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது; ஏனெனில் அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, இல்லையெனில் உலகம் முழுவதும் அழிந்துபோகும். அதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை. நாங்களோ அல்லது மத்திய கிழக்கோ மட்டுமல்ல, உலகம் முழுவதுமே. அது ஒரு பேரழிவாக இருந்திருக்கும். எங்களுக்கு வேறு வழியில்லை.
போர் முடிந்ததும், நான் காணும் சூழலின் அடிப்படையில், அந்த நல்ல நாட்களை நாம் விரைவில் மீண்டும் காண்போம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். அவர்களால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை," என்று கூறினார்.
எண்ணெய் போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல்வழி பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தம் குறித்துப் பேசிய டிரம்ப், "அது முடிந்துவிட்டது என்று நான் சொல்ல விரும்பவில்லை. அது தற்போது ஒரு திறந்த நிலையில் உள்ளது. அமெரிக்க கடற்படையின் தலைமையிலான முற்றுகை நடவடிக்கை ஒன்று உள்ளது, அதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.
ஆனால் அவர்கள் எதையாவது சுடலாம் அல்லது கண்ணிவெடியை (mine) வீசலாம்... அங்கே ஒரு கண்ணிவெடி இருந்தால் கூட நிலைமை சிக்கலாகிவிடும்; ஏனெனில் மக்கள் தங்கள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கப்பல்களை எடுத்துச் சென்று, எதிர்பாராத விதமாக கண்ணிவெடியில் சிக்கிக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்று நினைக்கிறேன். பேச்சுவார்த்தைகளில் நானும் ஈடுபட்டுள்ளேன். நாங்கள் நன்றாக செயல்படுகிறோம் என்று கருதுகிறேன். இது விரைவில் நடக்கலாம்," என்று கூறினார்.
இருப்பினும், புதன்கிழமையன்று, ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் இப்ன் ரெசா நாட்டின் தற்காப்பு திறன்கள் மீது நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் "கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி" கொடுக்க "எந்த முயற்சியையும் கைவிடாமல்" செயல்பட தயாராக இருப்பதாக அவர் கூறினார்.


