TamilsGuide

இதனால் தான் மக்கள் காவலன் கதையை தேர்வு செய்தேன் - நடிகர் மணிகண்டன்

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியை தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்” படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்” கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையை சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது.

இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பு – அருள் மோசஸ், கலை இயக்கம் – பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி – டான் அசோக், ஒலியமைப்பு – ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார், ஒப்பனை – ராமச்சந்திரன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் “மக்கள் காவலன்” திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து நடிகர் கே. மணிகண்டன் பேசும் போது, “மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்த கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்த படத்தில் நடிக்க என்னை தூண்டியது.

இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார்.

Leave a comment

Comment