மாளிகைக்காடு பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் நிரந்தர மாற்று மையவாடி ஒன்றை மாளிகைக்காடு பிரதேசத்திலேயே அமைப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு (04) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டப ஜனாசா நலன்புரி அமைப்பு காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர், மாளிகைக்காட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசத்தின் கட்சி அமைப்பாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, மாளிகைக்காடு மக்களுக்கு நிரந்தரமான மாற்று மையவாடி ஒன்றை பெற்றுத்தருவதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
குறிப்பாகஇ தற்போதைய நிலைமைகள், எதிர்கால தேவைகள், பொருத்தமான காணி தெரிவு, சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மாளிகைக்காடு பிரதேசத்தின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிரந்தரமான மையவாடி வசதி அவசியமானதாக மாறியுள்ளதையும் இவ்விடயம் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பதையும் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன்இ அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாளிகைக்காடு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிலையான தீர்வை பெற்றுத்தர அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் இவ்விடயத்தை துரிதப்படுத்துவதற்காக ஒரு செயற்குழுவை அமைத்து, உரிய தரப்பினருடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம் மாளிகைக்காடு மக்களின் நீண்டகால சமூகத் தேவைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான கலந்துரையாடலாகக் கருதப்படுவதுடன் எதிர்காலத்தில் நிரந்தர மாற்று மையவாடி அமைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளுக்கு இக்கூட்டம் முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


