TamilsGuide

ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த காதலியின் கல்லறையில் தற்கொலை செய்துகொண்ட இஸ்ரேல் வாலிபர் 

அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தனது காதலியின் கல்லறையில் இஸ்ரேல் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

லிரோன் பர்தா என்ற அப்பெண், 2023 அக்டோபர் 7 அன்று நோவா இசைவிழாவில் பார் மேனேஜராக பொறுப்பாளராக பணியாற்றிய போது ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரின் உடல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள எல்கானா மயானத்தில் புதைக்கப்பட்டது.

லிரோன் பர்தாவின் காதலர் பார் அஸ்ராப் (30 வயது) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலி மறைவால் வாடியுள்ளார்.

இந்நிலையில் அஸ்ராப் ஆகஸ்ட் 1 அன்று, தனது சகோதரரின் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த போது திடீரென காணாமல் போனார்.

அவர் வராததால் தேடிச் சென்ற அவரது சகோதரி, லிரோனின் கல்லறைக்கு அருகே அஸ்ராப் துப்பாக்கிக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவசர உதவிக் குழுவினர் விரைந்து வந்தபோதிலும், அஸ்ராபைக் காப்பாற்ற முடியவில்லை.

அக்டோபர் 7 தாக்குதலின் போது லிரோன் பர்தா தப்பிச் செல்ல வாய்ப்பிருந்தும், காயமடைந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அங்கேயே இருந்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

லிரோனின் மறைவுக்குப் பிறகு அஸ்ராப் முற்றிலும் மனமுடைந்து காணப்பட்டதாகவும், சோகத்திலிருந்து அவரால் மீளவே முடியவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்குச் சில நாட்களுக்கு முன்பு கூட, லிரோனின் நினைவுகள் தன்னைத் தீவிரமாக வாட்டுவதாகவும், அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும் அஸ்ராப் தனது தாயாரிடம் கூறியுள்ளார் என கூறப்படுகிறது.

ஹமாஸ் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், அதிலிருந்து தப்பியவர்கள் மற்றும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் சந்தித்து வரும் தீவிர மன உளைச்சலுக்கு சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

நோவா இசைவிழாவில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தனது காதலியை இழந்து தப்பிய ரோய் ஷாலேவ் (28) என்பவரும், மகனை இழந்த யெலேனா கிலர் என்பவரும் மன உளைச்சல் தாளாமல் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment