TamilsGuide

ஐரோப்பாவை அடுத்தடுத்து தாக்கும் வெப்ப அலை

ஐரோப்பாக் கண்டத்தில் இந்த வருடத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வரலாறு காணாத இந்த வெப்பநிலை உயர்வு காரணமாக மனிதர்கள் மாத்திரமன்றி ஏனைய உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக பல இலட்சம் மக்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வெப்பநிலை தணியாத நிலையில் மேலும் பல உயிரிழப்புகளும், இடம்பெயர்வுகளும் ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

புவி வெப்பமாதல் உலகளாவிய ஒரு பிரச்சனையாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஆண்டுதோறும் உயர்ந்துவரும் வெப்பநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகளை மனித சமூகம் எதிர்கொண்டு வருகின்றது. இயற்கைக்கு விரோதமாக மனிதர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அழிவு நடவடிக்கைகள் மனித குலத்துக்கும், உலகில் வாழும் ஏனைய உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. எதனால் இத்தகைய காலநிலை மாற்றம் ஏற்படுகின்றது? எதன் விளைவால் பாதிப்புகள் ஏற்படுகின்றன? என்பதைத் தெரிந்திருந்தும் அவற்றைச் சீர்செய்ய முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை காரணமாக பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிகின்றது.

அறிவியல் வளர்ச்சியின் ஒரு அங்கமாக புவி வெப்பநிலை தொடர்பான பதிவுகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் முதலாக மேற்கொண்டு வருகின்றன. சொற்ப ஆண்டு வரலாற்றையே கொண்ட இந்தப் புள்ளிவிபரங்களை ஒப்பீடு செய்யும் போது 2026ஆம் ஆண்டு ஐரோப்பாக் கண்டத்தின் பல நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதி உச்ச வெப்பநிலை பதிவான ஆண்டாக உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
 
ஐரோப்பாக் கண்டத்தில் இந்த வருடத்திற்கான ஆகக் கூடிய வெப்பநிலையாக 48.4 பாகை செல்சியஸ் (119.1 பரன்ஹீட்) இத்தாலியில் பதிவாகி உள்ளது. சிசிலி பிராந்தியத்தில் உள்ள காஸ்ரல்ரேர்மினி என்ற இடத்தில் யூலை 18ஆம் திகதி இந்த வெப்பநிலை பதிவாகி இருந்தது. இரண்டாவது அதிகூடிய வெப்பநிலை ஸ்பெயின் நாட்டில் பதிவாகி உள்ளது. யூலை 22 மற்றும் 23ஆம் திகதிகளில் அன்டுஜார் மற்றும் மொன்ராறோ ஆகிய இடங்களில் பதிவாகிய வெப்பநிலை 45.1 பாகையாக இருந்தது. பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அதி கூடிய வெப்பநிலையாக 44.3 பாகை பதிவாகி உள்ளது.

அதேவேளை, பெலாரஸ், செக் குடியரசு, டென்மார்க், யேர்மனி, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் இது வரையான வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை இந்த வருடத்தில் பதிவாகி உள்ளது.

அதீத வெப்பநிலை வயோதிபர்களையும், சிறார்களையும் அதிகமாகப் பாதித்து வருகின்றது. வெப்பம் காரணமாக ஏற்படும் நீரிழப்பு, உரிய நேரத்தில் கவனிக்கப்படாதுவிட்டால் மரணத்தை ஏற்படுத்த வல்லது. இதன் காரணமாக பெரும்பாலும் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள வயோதிபர்கள் மரணத்தைத் தழுவும் நிலை உருவாகிறது. வழக்கமாக, கோடை காலத்தில் வயோதிபர்கள் மத்தியில் நிகழும் மரணத்தை விட பல மடங்கு அதிக மரணங்கள் இந்த வருடத்தில் அவதானிக்கப்பட்டு உள்ளன. தவிர, வெப்பத்தைத் தணிக்கும் நோக்குடன் பாதுகாப்பற்ற நீர்நிலைகளை மக்கள் நாடி தங்களைக் குளிர்விக்க முனையும் போதும் மரணங்கள் சம்பவிக்கின்றன.

யூன் மாத இறுதியில் அவதானிக்கப்பட்ட வெப்ப அலை காரணமாக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ஐரோப்பாக் கண்டம் முழுவதும் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக யூன் மாதத்தில் அவதானிக்கப்படும் சராசரி எண்ணிக்கையை விடவும் இந்த வருடத்தில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு இறந்தோரில் 9,000க்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேற்பட்டோராக உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் மாத்திரம் இந்தக் காலப்பகுதியில் 5,764 பேர் மேலதிகமாக மரணத்தைத் தழுவி உள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய பொதுச் சுகாதார அமைப்பின் தகவலின் படி 2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெப்ப அலையின் போது அவதானிக்கப்பட்ட மரணங்களை விடவும் 36 விழுக்காடு அதிகமான மரணங்கள் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.

வெப்பம் ஒருபுறம் மக்களை வாட்டியெடுக்க காட்டுத் தீ மறுபுறம் அவர்களின் இருப்பையே கோள்விக் குறியாக மாற்றியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப் பிரசித்தமான வைன் உற்பத்தி மையம் எனக் கருதப்படும் போர்தோ பிராந்தியத்தை காட்டுத் தீ அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீ காரணமாக இதுவரை இரண்டரை இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாரம்பரிய நகரமான போர்தோ தீ அபாயத்தில் உள்ளதோடு, வைன் உற்பத்தியின் மூலப் பொருளான திராட்சைத் தோட்டங்களும் நாசமாகும் நிலை உருவாகி உள்ளது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்த சம்பவமாக இது வரலாற்றில் பதிவாகி உள்ளது. தீயணைப்புப் படையினரின் பாரிய முயற்சி காரணமாக தீப் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப் பட்டாலும், நான்காவது வெப்ப அலை எதிர்பார்க்கப்படும் நிலையில் எதுவும் நடக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகி உள்ளது. அங்கு அதுவரை 42,000 ஹெக்ரயர் பிரதேசம் தீக்கு இரையாகி உள்ளது. 240 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன. தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்கள் மரணத்தைத் தழுவி உள்ளனர்.

காட்டுத் தீ காரணமாக ஸ்பெயின் நாட்டில் இதுவரை 116,000 பொதுமக்கள் இடம் பெயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இடம் பெயர்ந்தோரில் ஒரு சிலர் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருந்த போதிலும், தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் வெப்பநிலை நிச்சயமற்ற நிலையையே ஏற்படுத்தி நிற்கிறது. அந்த நாட்டில் 8,000 சதுர கிலோ மீற்றர் (310 சதுர மைல்) பரப்பளவு பிரதேசம் தீக்கு இரையாகி உள்ளது.
 
இதேவேளை, தற்போதைய வெப்ப உயர்வு காரணமாக ஐரோப்பாக் கண்டத்தில் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படக் கூடிய ஏதுநிலை உள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது. இந்த வருடத்தில் தானிய உற்பத்தியில் ஏற்படக்கூடிய பாதிப்பு காரணமாக 2 பில்லியன் ஈரோ இழப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த வருடத்தில் 4.1 மில்லியன் தொன் அளவில் அறுவடை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, ஹங்கேரியில் 2.4 மில்லியன் தொன் அறுவடை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் விவசாயத் துறையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாடுகள் தள்ளப்படும் அதேவேளை, இறக்குமதி காரணமாக விலைவாசி உயர்வு ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மே மாதம் ஆரம்பமான வெப்ப அலை இரண்டு மாதங்களைக் கடந்து மூன்றாவது மாதத்திலும் அவதானிக்கப்பட்டுவரும் நிலையில் தற்போதைய வெப்ப அலை இந்த வருடத்துக்கு மட்டுமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. மாறாக, தொடர்ந்துவரும் வருடங்களிலும் இதேநிலை நீடிக்கப் போகிறது எனக் கூறி பீதியைக் கிளப்புகிறார்கள் விஞ்ஞானிகள். தற்போதைய நிலையில் உலகில் அதிகமாக வெப்பநிலை உயர்ந்துவரும் பிராந்தியமாக ஐரோப்பாக் கண்டம் உள்ளது. உலகச் சராசரியோடு ஒப்பிடுகையில் ஐரோப்பாவின் வெப்பநிலை இரண்டு மடங்காக உயர்ந்து வருகின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அடுத்தடுத்து ஏற்பட்டுவரும் வெப்ப அலைகளையும், அதன் விளைவான காட்டுத் தீ அபாயத்தையும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கு ஒன்று உதவுவதன் மூலம் கையாண்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால், பொதுப் பிரச்சனையாக உள்ள உலகளாவிய சூழல் பிரச்சனையைக் கையாளுவதில் முறையான ஒருங்கிணைப்போ, வேலைத் திட்டமோ இல்லாமல் உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. உடனடிப் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமே ஆயினும் நீண்ட காலப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமால் இருந்தால் அது முட்டாள்தனமே அன்றி வேறில்லை.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a comment

Comment