TamilsGuide

மொட்டை ராஜேந்திரனின் திரை வாழ்க்கையை மாற்றிய ரசாயன விபத்து!

திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேந்திரன், ஆரம்ப காலத்தில் நல்ல சுருண்ட தலைமுடியுடனும், மீசையுடனும் தான் இருந்தார்.

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலாலும், மிரட்டலான வில்லத்தனத்தோடு கலந்த நகைச்சுவை நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன் (அருணாச்சலம் ராஜேந்திரன்). தற்போது 67 வயதாகும் இவர், இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் தனது உடலை சிக்ஸ்பேக் கட்டமைப்புடன் ஆரோக்கியமாக பராமரித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது உடலமைப்பு மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றிய தலைமுடி இழப்பு குறித்த அதிர்ச்சிகரமான பின்னணியை பகிர்ந்துள்ளார்.

தனது கட்டுக்கோப்பான உடல்நிலை குறித்து பேசிய ராஜேந்திரன், "நான் தினமும் வயிற்றுப் பகுதிக்கான தனிப்பயிற்சிகளை தவறாமல் செய்வேன். நாம் செய்யும் பயிற்சிகளை அர்ப்பணிப்புடன், சரியாகச் செய்தால் அதற்கான பலன்கள் தானாகவே நம் உடம்பில் பிரதிபலிக்கும்" என்றார்.

திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேந்திரன், ஆரம்ப காலத்தில் நல்ல சுருண்ட தலைமுடியுடனும், மீசையுடனும் தான் இருந்தார். மொட்டை தலையாக மாறியதற்கு பின்னால் இருக்கும் வேதனையான சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது 15 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிக்க வேண்டியதிருந்ததால் குதித்தேன். அந்த தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்திருந்தது எனக்கு தெரியாது. அதில் விழுந்த பிறகு என் தலைமுடியும் புருவங்களும் அடித்து செல்லப்பட்டது. அந்த நேரத்தில் நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சம்பவம் என் திரை வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது என்றார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான 'நான் கடவுள்' திரைப்படத்தில், இந்த புதிய மொட்டை தலை தோற்றம் அவருக்கு கூடுதல் பலமாக அமைந்தது. அதில் அவர் ஏற்ற கொடூரமான வில்லன் கதாபாத்திரம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மற்ற வில்லன்களிடமிருந்து இவரைத் தனித்துக் காட்டிய அந்த விசித்திரமான குரலும், தோற்றமும் இன்று அவரை முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக உயர்த்தியுள்ளது.
 

Leave a comment

Comment