TamilsGuide

அமெரிக்காவில் வேலைபார்க்க விரும்பும் மாணவர்களுக்கு புதிய கட்டணம் வசூலிக்க ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை

அமெரிக்காவில் படித்துவிட்டு, அங்கேயே தங்கி வேலைபார்க்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் டாலர் கட்டணம் வசூலிக்க டொனால்ட் ட்ரம்ப் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா மதிப்பில் ரூ.95.45 லட்சம் வசூலிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.

கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை.

நிறுவனங்கள் செலுத்தவேண்டும் எனக்கூறப்பட்டால், அதற்குபதில் உள்நாட்டிலேயே பணியாட்களை நியமிக்க அவை முற்படும். மாணவர்கள் செலுத்தவேண்டும் எனக் கூறப்பட்டால், பலரால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தமுடியாது.

H1B விசாக்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் அரசாங்கத்தின் முன்மொழிவை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

சர்வதேச மாணவர்கள் தங்களின் எஃப்-1 விசா மூலம் படிப்பை முடித்த பின், 1 முதல் 3 ஆண்டுகள் வரை தங்கிப் பணிபுரிய அனுமதிக்கும் OPT திட்டத்திற்கு இந்தக் கட்டணம் பரிசீலிக்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் OPT திட்டத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4,19,000 ஆகும்.

OPT (Optional Practical Training) என்பது அமெரிக்காவில் உள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கும் சர்வதேச மாணவர்கள் (F-1 விசா பெற்றவர்கள்), தங்கள் படிப்பு தொடர்பான துறையில் அங்கு தங்கி வேலை செய்து அனுபவம் பெற வழங்கப்படும் தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதியாகும்.

இந்தத் திட்டத்தை தற்போது பயன்படுத்தி வரும் மாணவர்களுக்குத்தான் மேற்கூறிய கட்டணத்தை வசூலிக்க ட்ரம்ப் அரசு பரீசிலித்து வருகிறது. இதில் இரண்டு வகை உள்ளது.

படிப்பு முடிவதற்கு முந்தைய தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதி. படிப்பை முடிப்பதற்கு முன்பே பகுதி நேரமாக வேலை செய்வது.

படிப்பு முடிந்த பிறகு வழங்கப்படும் தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதி. படிப்பை முழுமையாக முடித்த பிறகு முழு நேரமாக வேலை செய்வது.

வழக்கமான OPT : கலை, வணிகம் போன்ற பொதுவான பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு 12 மாதங்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

STEM OPT நீட்டிப்பு : அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM - Science, Technology, Engineering, Math) பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் 24 மாதங்கள் அனுமதி கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் மொத்தம் 36 மாதங்கள் வரை அமெரிக்காவில் தங்கிக் வேலை செய்ய முடியும்.

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் பெரும்பங்கு உண்டு. தற்போது 3.3 லட்சத்திற்கும் அதிகமானோர் அங்குப் பயின்று வருகின்றனர். உயர்கல்விக்காகப் பெரும் கடன் வாங்கிவிட்டு, அங்கு வேலை செய்து கடனை அடைக்க நினைக்கும் நடுத்தர குடும்பத்து மாணவர்களுக்கு இது மிகப்பெரிய தடையாக இருக்கும்.

100,000 அமெரிக்க டாலர் கட்டணம் என்பது இன்னும் ஒரு முன்மொழிவாக மட்டுமே உள்ளது. இருப்பினும் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இதில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவர். 
 

Leave a comment

Comment