மின்னுருளி (Electric Scooter) விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சின் ஓ-து-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மின்னுருளி உள்ளிட்ட தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் ப்ரூஜெர் (Alexandre Brugère) கையெழுத்திட்டுள்ள புதிய அவசர உத்தரவின் மூலம் இந்தச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, மின்னுருளிகள், ஒற்றைச் சக்கர மின்வாகனங்கள் மற்றும் பிற தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களை இயக்குபவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
மேலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் தொலைவிலிருந்தே தெளிவாகக் காணக்கூடிய ஒளிரும் பாதுகாப்பு மேலாடை அல்லது ஒளிரும் பட்டை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வாகனங்களை இயக்குபவர்கள் குறைந்தது 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரைத் தாண்டக் கூடாது எனவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"ஒவ்வொரு விபத்தும் தவிர்க்கப்பட வேண்டிய துயரமான நிகழ்வு" எனக் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், புதிய சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் அண்டை மாவட்டமான சென்-எ-மார்னில் (Seine-et-Marne) இடம்பெற்ற 45 மின்னுருளி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 51 பேர் காயமடைந்திருந்தனர்.
அந்த விபத்துகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாக வெளியான புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க காரணமாகியுள்ளன.
மேலும், ரூவேல்-மால்மேசோன் (Rueil-Malmaison) நகரில் 'சீசர்' என்ற சிறுவன் மின்னுருளி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நகரிலும் ஏற்கனவே தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பிரான்சின் பல நகராட்சிகள் இதேபோன்ற பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இந்த நடைமுறையை நாடு முழுவதும் பொதுச் சட்டமாக்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


