TamilsGuide

காவிரி விவகாரம் - கர்நாடக தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட ஜன நாயகன் படம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் ஜனநாயகன் பட போஸ்டர்களை கிழித்ததால், தியேட்டர்கள் படத்தை நிறுத்தியுள்ளனர்.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தண்ணீர் திறக்காமல் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் விஜய், பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் கர்நாடகம் வர வேண்டாம் என்று டி,கே. சிவக்குமார், தமிழக முதலமைச்சர் விஜயை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, கடந்த 20-ந்தேதி ரிலீஸ் ஆன முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் கர்நாடகாவில் இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று போராட்டக்காரர்கள் தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகன் பட பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் ஜனநாயகன் படம் தியேட்டர்களில் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

முன்னதாக, பெங்களூரு வரும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சிறப்பான மரியாதை கொடுக்கப்படும். அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று விவரிக்கப்படும் என்று டி.கே. சிவக்குமார் கூறியிருந்தார்.

தமிழகத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன தினம், டெல்லியில் மாணவர்கள் போராட்டம் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஜனநாயகன் படத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர். குறிப்பாக தியேட்டர்களில் படம் பார்த்த அமைச்சர்களை சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment