TamilsGuide

ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு

காசாவில் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச்செய்யும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

கடந்த அக்டோபரில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டபோது காசாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தப்பட்ட 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பதிவில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளதாவது,

"காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்களது ஆயுதங்களை முழுமையாகத் துறப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அமைதி வாரியம் எட்டியுள்ளது.

பிராந்தியத்தில் நிலையான அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான ஒரு மிகப்பெரிய மைல்கல் இது" என தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பதிவில், "இந்த ஒப்பந்தம் கவனமாக திட்டமிடப்பட்ட கட்டங்களில் செயல்படுத்தப்படும். ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட்ட பின்னர், இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறும்.

காசாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய, நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் சர்வதேச படை புதிய பாலஸ்தீன காவல் படையுடன் இணைந்து செயல்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் காசா, தனது மக்களுக்கு சேவை செய்யும் புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் வரும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த எகிப்து, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

முன்மொழியப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லை என மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

காசா முழுமையாக ராணுவமயமாக்கப்பட்டு ஹமாஸிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் அகற்றப்பட்டால் மட்டுமே எந்தவொரு அமைதி நடவடிக்கைக்கும் இஸ்ரேலின் உடன்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து ஹமாஸ் இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

2023 அக்டோபர் 7 அன்று காசாவை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு எதிராக அந்நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

தாக்குதலுக்கு பதிலடியாகவும் பணய கைதிகளை மீட்கவும், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஆனால் பெரும்பாலும் பொதுமக்களையே தாக்கிய இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபரில் டிரம்ப் முயற்சியில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை தாக்குதலை தொடர்ந்தது. போர் நிறுத்தத்தின் பின்னரும் தாக்குதல் தொடர்கிறது. இதனால் காசாவில் பலி எண்ணிக்கை 72,000 த்தை கடந்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு மத்தியிலும் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

மேலும் காசாவுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் கொடுக்க, ஹமாஸ் தங்கள் அரசை காசாவில் கலைப்பதாக அறிவித்தது. ஆனால் ஆயுதங்களை கைவிட மறுத்தது. இந்நிலையில் தற்போது டிரம்ப்பின் அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடன்படுமா என்பது நிச்சயமில்லை.

காசாவில் போருக்குப் பிந்தைய நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பே இந்த அமைதி வாரியம். டிரம்ப் இதன் நிறுவனத் தலைவராக செயல்படுகிறார். இதில் பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Leave a comment

Comment