கனடாவின் தேசிய சுற்றுலா சந்தைப்படுத்தல் அமைப்பான 'டெஸ்டினேஷன் கனடா' நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெக்மீத் சிங் நியமிக்கப்பட பரிசீலிக்கப்பட்டு தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த நியமனப் பரிசீலனைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த அமைப்புகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஜெக்மீத் சிங்கிற்கு சுற்றுலாத்துறையில் ஏதேனும் முன்அனுபவம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. "இது சுற்றுலாத்துறைக்கும் இந்த நிறுவனத்திற்கும் இழைக்கப்படும் அவமானமாகும்.
இது ஏதோ ஒரு சாதாரண தூதரகப் பதவி அல்ல; கனடாவில் பில்லியன் கணக்கான டாலர் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஒரு முக்கிய அமைப்பு" என்று பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2021 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு, 2022-இல் ஜெக்மீத் சிங் தலைமையிலான என்.டி.பி கட்சி செய்துகொண்ட ஆதரவு ஒப்பந்தமே முக்கியக் காரணமாக இருந்தது.
இந்த ஒப்பந்தம் 2024 வரை நீடித்தது. பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ஜெக்மீத் சிங், சமீபத்தில் கூட்டாட்சி நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்குத் தகுதி பெற்றார். இந்த கிரவுன் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாகி பதவிக்கு ஆண்டுக்கு 3,50,000 டாலர் வரை ஊதியம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சட்டத்தரணியாகப் பணியாற்றி அரசியலுக்கு வந்த ஜெக்மீத் சிங், 2017 முதல் 2025 வரை என்.டி.பி கட்சியின் தலைவராகவும், பர்னபி சவுத் தொகுதியின் எம்பியாகவும் இருந்தார்.
2025 கூட்டாட்சித் தேர்தலில் என்.டி.பி கட்சி தனது வரலாற்றுப் பாதகமான பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


