இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை.30ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகி உள்ளது.
ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது.
மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது.
ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன.
அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


