அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாயன்று (28) அறிவித்தது.
இந்த நடவடிக்கை, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும். இவற்றில் பல சீனாவில் தயாரிக்கப்படுபவை.
அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சாதனங்களாக இவை இருக்கக்கூடும் எனக் கூறியே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக FCC தெரிவித்துள்ளது.
ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் வளர்ச்சியை எட்டுவதில் சீனா அமெரிக்காவுடன் போட்டியிட்டு வரும் நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
அத்துடன், தரவு மையங்கள் மற்றும் சூரிய மின்கலத் தகடுகளில் பயன்படுத்தப்படும் மின்சக்தி மாற்றிகள் (Power Inverters) இறக்குமதிக்கும் அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையம் (FCC) தடை விதித்துள்ளது.
வொஷிங்டனின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம், வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா அரசியல்மயமாக்குவதையும், அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்துத் தடைகள் விதிப்பதையும் பெய்ஜிங் நீண்டகாலமாக எதிர்த்து வருவதாகக் கூறியுள்ளது.
அத்துடன், தனது நலன்களுக்குப் பொருள்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் பதிலடியாக, சீன அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தூதரகம் கூறியது.


