நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஏகமனதாக எதிர்த்துள்ளது. SouthAsians & Diaspora
நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்துறையினரும் இம்முயற்சிக்கு உறுதியாக எதிராக இருப்பதாக அச் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை (29) BASL வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர், கூட்டத்தில் நேரில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் மற்றும் இணையவழியில் பங்கேற்றவர்கள் என அனைவரும் அந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததாகத் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவுக்கு நீதிபதிகளிடமிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளதாகக் கூறிய அவர், இம்முயற்சி நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தார்.
அத்துடன், அரசாங்கத்தின் முடிவை ஒரு விவேகமற்ற நடவடிக்கை என்று வர்ணித்த ராஜீவ் அமரசூரிய, பொதுக்கூட்டத்தில் கிடைத்த ஆதரவு தங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதால், இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறினார்.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்ததுடன், சட்டத் துறையினரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு அந்த முன்மொழிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், இந்த விடயத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து விவாதிப்பதற்காக, இன்று மாலை 5 மணிக்கு நீதி அமைச்சரைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


