மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானின் 'சிறுகப்பல் படைகளை' ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்ததாக ரஷ்ய அரசின் 'ஸ்புட்னிக்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் மண்டலத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், எனக் குறிப்பிட்ட புடின், ஈரானியக் கடற்படை தங்களது 'மஸ்கிட்டோ ஃபிலீட்' மூலம் நவீன போர்மறையில் மிகவும் திறம்படச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
இது புதிய தொழில்நுட்பங்களின் விளையாட்டு. நம்மிடமும் குறைந்த எடைகொண்ட சிறிய கப்பல்கள் உள்ளன; ஆனால் அவை அதிநவீன ஆயுதங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்புட்னிக் தகவலின்படி, ஈரானின் 'மஸ்கிட்டோ ஃபிலீட்' என்பது சுமார் 20 'காதிர்-கிளாஸ்' சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிவேக ஏவுகணைப் படகுகளைக் கொண்ட ஒரு கடற்படை அமைப்பாகும்.
மிகச் சிறியதாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கக்கூடிய இந்தப் படகுகள் எதிரிகளின் பெரிய போர்க்கப்பல்களைக் குழப்பித் தாக்கும் வல்லமை கொண்டவை.
ஈரானின் பாறை நிறைந்த கடலோரப் பகுதிகளில் செதுக்கப்பட்டுள்ள நிலத்தடி குகைகளுக்குள் இவற்றை எளிதாக மறைத்து வைக்க முடியும்.
இந்த மறைவிடங்கள் மற்றும் வேகக் காரணிகளால், அமெரிக்காவின் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன ஆயுதங்களாலும் கூட இவற்றை எளிதில் அழிப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.


