கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
இளம் வயதிலேயே அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ரெபெக்கா லூனா, 'WhereDidBecsGo' என்ற கணக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் 95,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைப் பெற்றிருந்தார்.
அல்சைமர் நோயுடன் வாழும் தனது அன்றாட அனுபவங்களையும், "இறக்கும் தருவாயில் டேட்டிங் செய்வது" மற்றும் "புலப்படாத குறைபாடுகளுடன் பயணம் செய்வது" போன்ற தலைப்புகளில் வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
அண்மையிால் தனது உடலமைப்பில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக, தனக்குக் குறிப்பிட்டிருந்த மருத்துவ உதவியுடனான உயிர் மாய்ப்பு திகதியை முன்கூட்டியே மாற்றி அமைப்பதாகத் தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்திருந்தார்.
என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலும், நிபுணத்துவப் பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தனது இறுதி வீடியோவில் பகிர்ந்திருந்தார்.
தனது கடினமான சூழ்நிலையிலும் மதுப் பழக்கத்தைக் கைவிட்டு உறுதியாக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் 50 வயதை எட்டுவதற்குள் இறக்க விரும்பவில்லை, ஆனால் நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அனைவரும் தம்மைத் தாமே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


