TamilsGuide

ஹாலிவுட்டில் கோலாகலமாகத் தொடங்கிய சிவப்பு கம்பள வரவேற்பு

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) பிரம்மாண்ட தயாரிப்பான ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் உலகளாவிய முதல்காட்சி, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள புகழ்பெற்ற எல் காபிடன் திரையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஹாலிவுட் பாலேவார்டு பகுதியில் அமைக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் டாம் ஹாலண்ட் மற்றும் நாயகி ஜென்டாயா ஆகியோர் சிறப்பு ஆடைகளில் வருகை தந்து ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றனர். இவர்களுடன் படத்தில் இணைந்து நடித்துள்ள சாடி சிங்க், ஜேக்கப் பாட்டலான், ஜான் பெர்ன்தால் மற்றும் மார்க் ரஃப்பாலோ உள்ளிட்ட பல நட்சத்திரங்களும், இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டனும் கலந்துகொண்டனர்.

கதைக்களம்:

Spider-Man: No Way Home படத்தின் சம்பவங்களுக்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து நடப்பதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. உலகமே பீட்டர் பார்க்கரை மறந்த நிலையில், அவர் தனியாக வாழ்ந்துகொண்டு நியூயார்க் நகரத்தைக் காக்கும் முழுநேர ஸ்பைடர் மேனாகச் செயல்படுகிறார். இந்த சூழ்நிலையில், பீட்டர் சந்திக்க நேரிடும் புதிய இயற்பியல் மாற்றங்களும், கண்ணுக்குத் தெரியாத ஒரு மர்மமான புதிய வில்லனின் அச்சுறுத்தலுமே இப்படத்தின் முக்கியக் கதையாகும்.

ரெட் கார்பெட்டில் வெளிவந்த சீக்ரெட்:

லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற இப்படத்தின் பிரீமியர் ரெட் கார்பெட் நிகழ்வில், படத்திற்குப் பங்களித்த பாடகர் 'ஸ்டீவ் லேசி' அளித்த பேட்டி ஒன்றில் தவறுதலாகப் படத்தின் மிகப்பெரிய ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சியாளர் அவரிடம், "எந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "எனக்கு ஜீன் கதாபாத்திரத்தைப் பிடிக்கும். அவர்தான் படத்தில் வில்லன். ஆனால் அவர் செய்யும் காரியங்களுக்குப் பின்னால் ஒரு நியாயமான காரணம் இருக்கும்' என்று ஸ்டீவ் லேசி வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

ரசிகர்களின் கணிப்பு உண்மைதானா?

கடந்த சில மாதங்களாகவே, 'Stranger Things' தொடரின் மூலம் பிரபலமான நடிகை 'சாடி சிங்க்' (Sadie Sink) இப்படத்தில் எக்ஸ்-மென் தொடரின் புகழ்பெற்ற 'ஜீன் கிரே' கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பல தகவல்கள் பரவி வந்தன. மார்வெல் நிறுவனம் இவரைப் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருந்த போதிலும், ஸ்டீவ் லேசியின் இந்தத் தற்செயலான பேச்சு ரசிகர்களின் நீண்ட நாள் சந்தேகத்தை உறுதி செய்துள்ளது.

இத்திரைப்படம் வரும் 31ம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது. எல்.ஏ பிரீமியர் திரையிடலைத் தொடர்ந்து, படத்திற்கு உலகளாவிய சினிமா விமர்சகர்களிடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நேர்மறையான வரவேற்பும் உருவாகியுள்ளது.
 

Leave a comment

Comment