முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து அதன் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு (CIABOC) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலஞ்ச ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள், விசாரணைகளை நிறைவு செய்து முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் கோரினர்.
அதனைத் தொடர்ந்து, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
2014 ஜனவரி 22 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி இயக்கப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL319 விமானத்தின் பயணப் பாதையை மாற்றியதன் மூலம் அரசுக்கு 4,512 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுத்தியதாக நிஷாந்த விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 2014 ஜனவரி 26ஆம் திகதி மாலைத்தீவிலிருந்து இலங்கை ஊடாக பிரான்ஸ் நோக்கிப் பயணித்த 75 பயணிகளை UL563 விமானத்தில் ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்ததன் மூலம் மேலும் 19,160 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 2014 டிசம்பர் 19 ஆம் திகதி கட்டுநாயக்க 18 ஆம் மைல் கல் மைதானத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக பொதுமக்களின் நிதியில் இருந்து 12.5 இலட்சம் ரூபாவை பயன்படுத்த அனுமதித்ததாகவும் நிஷாந்த விக்கிரமசிங்க மீது தனியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


