TamilsGuide

வடக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுப்போம் – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பிரத்தியேக கைத்தொழில் பேட்டைகள் இல்லை.

அதனை நிறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. SouthAsians & Diaspora

இந்தக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்:

வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

விவசாயம் மற்றும் கடல்வளம் என்பன எமது மாகாணத்தின் தனிப்பெரும் வளங்களாக உள்ளபோதிலும், விவசாய உற்பத்திகளைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ போதிய வசதிகள் இங்கு இல்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், சந்தைப்படுத்தலில் எமது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண இத்தகைய வணிக இணைப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்ந்தும் அதே நிலையிலேயே தேங்கி நிற்காமல், அவர்கள் வளர்ச்சி கண்டு ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க வேண்டும்.

அதற்காக எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். முயற்சியாளர்களும் இந்த இலக்கை முழுமூச்சாகக் கொண்டு தங்களது பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான செயன்முறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் உரிய திணைக்களங்களின் சாதகமான ஒருங்கிணைப்பும் எமக்குக் கிடைத்து வருகின்றது. சாத்தியமானளவு மிக விரைவில் இது நடைமுறைக்கு வரும்.

நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகச் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே திகழ்கின்றனர்.

எமது வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் இவர்களுக்கான பிரத்தியேக கைத்தொழில் பேட்டைகள் இல்லை.

சில தினங்களுக்கு முன்னர் இங்கு வருகைதந்திருந்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்கவிடம் இது தொடர்பில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அவர் ஏனைய மாவட்டங்களிலும் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வளர்த்தெடுக்கும் பணிகளை நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்.

இவ்வாறான வணிக இணைப்பு முயற்சிகள் நிச்சயமாக அவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும்,’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கௌசல் ராஜபக்ச, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.சிவகெங்காதரன், இந்தியத் துணைத்தூதரக அதிகாரி, கைத்தொழில் முயற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment