கண்டி, பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கிள்ஸ்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு அருகில் இருந்த பாறையொன்றிலிருந்து தவறி விழுந்து, 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த இரு சிறுவர்களும் மேலும் நான்கு ஆண் சிறுவர்களுடன் பாடசாலை முடிவடைந்த பின்னர் வீடுகளுக்கு சென்று, பின்னர் குறித்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அச்சந்தர்ப்பத்தில், கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இரு சிறுவர்களும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அருகிலுள்ள பாடசாலையொன்றில் 09 ஆம் மற்றும் 08 ஆம் தரங்களில் கல்வி கற்று வந்த மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பன்வில பொலிஸ் நிலையத்தினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


