தாய் மகளுக்குக் கட்டிய தாலி!..எடிட் செய்யப்பட்ட எட்டு ரீல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.!..ஆர்வமாக பலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.!.. அவர்களுக்கு இது சாதாரண விஷயம்!.. ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் அது வரை எடுத்த படச்சுருள் சுடச்சுட பார்க்கப்படும்.ப்ளஸ் மைனஸ் அலசப்படும்.தலைப்பிற்குச் சொந்தக்காரரான அறிஞர் அண்ணா!.. அவரோடு சில நண்பர்கள்.படத்தின் நாயகன் எம்.ஜி.ஆரோடு ராம அரங்கண்ணல் மற்றும் இயக்குநர் நீலகண்டன் மற்றும் ஆர்.ஆர்.சந்திரன்.ஆனால் அந்த பலரோடு ஒட்டாமல் இன்னொருவரும் ஓரமாக உட்கார்ந்து பதைபதைப்போடு எடுத்த ரீல்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்.அவருக்கு இது புதுசு!.. நண்பர் அழைத்ததால் அவரும் வந்து தொற்றிக்கொண்டார்.புரஜக்ஷன் பார்ப்பது அதுவே அவருக்கு முதல் முறை!..எம்.ஜி.ஆரும் அண்ணாவும் எதையோ சொல்லிச் சிரிக்கிறார்கள்.டி.ஆர்.பாப்பாவும் சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்.இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கொரு வாய்ப்புக் கிடைக்குமா?. இளைஞர் இறைவனை வேண்டுகிறார்.ஆச்சரியம்! ... சில நாட்களிலேயே பலித்தது.அந்த இளைஞர் தான் பல தலைமுறைக் கலைஞர்களுக்கு பாட்டெழுதிய வாலிபக் கவிஞர் வாலி!..ஐயாவின் நினைவு தினம் இன்று.வாலியின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டினால் இப்படிப்பட்ட ஏராளமான ஆச்சர்யங்கள்! .
அண்ணா எம்.ஜி.ஆர்.டி.ஆர்.பாப்பா மூவரையும் எட்ட நின்று தாய் மகளுக்குக் கட்டிய தாலியில் பார்த்த வாலி நல்லவன் வாழ்வான் படத்தில் இந்த மூவரையும் மிக நெருக்கத்தில் பார்த்தார்.மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு மரப் பெஞ்சில் மல்லாக்கக் கிடந்த வாலி அறைக் கதவு தட்டப்படுவதைக் கேட்டார்.எழுந்து போய் திறந்ததும் இங்க யாரு சார் வாலி?. நான் தாங்க!..நாளைக்கு காலைல உங்களை அரசு பிக்சர்ஸூக்கு வரச் சொன்னாங்க!.. வந்த வேகத்தில் அவர் செல்ல எங்கிருக்கு?. யார் வரச் சொன்னா?. கம்பெனி கம்பெனியா ஏறியும் கிடைக்காத வாய்ப்பு!..எம்.ஜி.ஆருக்கு பாட்டெழுத நீலகண்டன் மூலம் கிடைத்தது.காமா சோமா நடிகருக்கெல்லாம் பாட்டெழுதி யாரும் கண்டுகொள்ளாத நேரம்.ஒரு டூயட்டுக்கு பாட்டு வேணும்!.. அதுவும் எம்.ஜி.ஆருக்கு.அடுத்த நாள் காலை அரசு பிக்சர்ஸில் இருந்தார் வாலி.நீலகண்டன் சூழலைச் சொல்ல உருவான பல்லவி தான் சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்.பல மெட்டுக்களைப் போட்டு பாப்பா வாசிக்க ஒன்று தேர்வானது.இதுக்கு சரணங்களை எழுதீட்டு வாங்க!..பனகல் பார்க் இழுத்துக்கொண்டு போனது நீலகண்டன் உதவியாளரான காந்தி ராமன்.இந்த வாய்ப்பை வாங்கித் தந்தவர் மா.லட்சுமணன்.ஒருவருக்கு நல்ல நேரம் ஆரம்
பமானால் பல இடத்திலிருந்து உதவிக்கு ஆட்கள் வருவார்கள்.ஒரு மாலை நேரத்தில் கிளப் ஹவுஸூக்கு நாகேஷைத் தேடி லட்சுமணன் வர வாலியின் கிறுக்கலை தாராபுரம் சுந்தரராஜன் பாடிக்கொண்டிருக்க வாய்ப்பு வந்த வழி இது தான்.இதனால் வாலி வளமானது வரலாறு!..
மதுர கவி பாஸ்கரதாஸ் தொடங்கி பாபநாசம் உடுமலையார் கவியரசு பட்டுக்கோட்டை வரை பலரையும் பார்த்த சினிமா வாலியை மட்டும் நீண்ட காலம் தன்னகத்தே வைத்துக்கொண்டது.நாலைந்து தலைமுறைக் கலைஞர்களுக்காக தனது எழுத்தாணியை எடுத்த வாலி கடைசி வரை அதில் மை குறையாமல் பார்த்துக்கொண்டது தான் திரையுலக ஆச்சர்யம். ஒவ்வொரு பத்தாண்டிலும் தன்னை புதுப்பித்துக்கொண்ட மகா கவிஞர் வாலியென்றால் அது மிகையில்லை.சினிமாவிற்கு பாட்டெழுதுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.தான்தோன்றித்தனமாக கவிதை எழுதுவது வேறு பாத்திரங்களின் தன்மையறிந்து சமைப்பதென்பது வேறு.இலக்கிய உலகில் பல பாராட்டுக்களைப் பெற்ற வாலி சினிமா உலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலங்களும் உண்டு.இரண்டையும் தனது தலையில் ஏற்றிக்கொள்ளாதவர் வாலி.திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி.அதில் தனது சொந்தக் கருத்துக்கு இடமில்லை என நினைப்பவர் வாலி.எம்.ஜி.ஆர் படமென்றால் உதயசூரியன் வந்தே தான் ஆகணுமா?. ஏ.வி.எம்.செட்டியார் கேட்டபோது தான் இன்னொரு உலகம் இருப்பது வாலிக்கே தெரியும். காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்னு எழுதி இருக்கீங்களே!..என்னைப் பத்தி என்ன நெனப்பாங்க?. எம்.ஜி.ஆரே கேட்டபோது தான் அன்றைய அரசியல் சூழலே புரிந்தது.ஆஹா!.. நாம் நினைப்பதெல்லாம் எழுத்தில் வடித்துவிட முடியாது.ஆனால் வளமான தமிழோடு விளையாடினால் யாரும் தடுத்துவிடவும் முடியாது.வாலி தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்தது இங்கு தான்.தமிழோடு விளையாட அவருக்கு யாரும் சொல்லித் தர வேண்டியதில்லை.வார்த்தை ஜாலம் என்பார்களே!.. அது அவருக்கு வகையாக அமைந்தது.திரைப்பாடல்களில் அவரது சொல்லாடல்கள் ரசிகர்களை வியக்க வைத்தன.ஆசை முகத்தில் ஒரு அருமையான பாடலுண்டு.நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா?. பாடல் முழுவதும் அசத்தலான சொல்லாடல்.மேடையில்லாமல் நாடகம் வைத்தது.பூவிதழோரம் புன்னகை வைத்தது உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது என பாடல் முழுவதும் பட்டையைக் கிளப்பியிருப்பார்.
இமைகள் மூடிய கண்ணாக இதயம் தேடிய பெண்ணாக இரவாய் பகலாய் நீயிருக்க உறவாய் உயிராய் நானிருப்பேன்.அதே ஆசை முகத்தில் யாருக்கு யாரென்று தெரியாதா பாடலில்.இதயக்கனியில் அருமையானதொரு சொல்லாடல்.நீராடும் துறையென்று நீயிருக்க நீந்தாத குறை கொண்டு நானிருக்க தீராத தாகங்கள் தீர்த்து விடு எனை தேன் பாயும் ஓடையிலே சேர்த்துவிடு என்பார்.நீந்தாத குறையோடு நாயகன் நிற்பதை நயமாக எடுத்துரைத்திருப்பார் அந்த இதழே இதழே தேன் வேண்டும் பாடலில்.தத்தை போல தாவும் பாவை. மெத்தை போல பூவைத் தூவும் வாடை.!..முள்ளில்லாத தாழை!..என்னென்ன வண்ணமயமான வார்த்தைகள். இவருக்கு மட்டும் எங்கிருந்து இப்படி வகையாகச் சிக்குகிறது?. காதலில் வர்ணனை அவசியம்.மனித மனதில் காதல் பிறந்துவிட்டால் கண் மண் தெரியாது.மனப் பறவைக்கு இலக்கும் தெரியாது.கோடி எண்ணம் ஆசை நெஞ்சில் மின்னி மறைவதை வாலியால் தடுக்கவும் முடியாது.இதழ்கள் பொழியும் அமுத மழையில் நம்மை மிதக்க வைப்பார்.பனியில் நனையும் மலரின் உடலில் நம்மை சிலிர்க்க வைப்பார்.எங்க வீட்டுப் பிள்ளையில் ஒரு காதல்.பெண் போனால் அவள் பின்னாடியே நம் கண் போகும்.காதலனுக்கும் இது புது அனுபவம்.முன்பு இல்லாத சுகம் தந்தாயோ என எழுதியிருப்பார்.யோசித்துப் பார்த்தால் ஆமாம் என்போம்!..ஆயிரம் பூவை அள்ளியெடுத்து அள்ளி எடுத்ததை கிள்ளியெடுத்து!.. யோசித்துப் பார்த்தால் ஆழமான மைக்ரோ எகானமி ஒன்று அதிலிருக்கும்.கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து நெஞ்சில் வைத்தாளே!..ஆச்சர்யமான வரிகள்.இதே காதலன் தான் குமரிப் பெண்ணின் உள்ளத்தில் வர வாடகை எவ்வளவு என்று கேட்டவன். திங்கள் தங்கையாக தென்றல் தோழியாக அந்தக் கன்னியை ஊர்வலமாக அழைத்து வரும் வாலி.இன்னொரு பாடலில் அழகு மகனின் மழலை மொழியை தென் பொதிகை செந்தமிழோடு ஒப்பிட்டிருப்பார்.அந்த முத்து முகம் முழு நிலவாக அது முப்பது நாளும் வரும் அழகு சொல்லில் அடங்காதது!..
என்னை அசத்திற மாதிரி ஒரு பல்லவி சொன்னா இந்த ரோலக்ஸ் உங்களுக்குத் தான்.வாட்சைக் கழற்றி வைக்கிறார் மன்னர். தனியாக முதன் முதலாக இசையமைக்கிறார்.வாலிக்கு சவால் விடுகிறார்.காதலெனும் மந்திரச் சொல் காற்றினில் மிதந்து வந்து காதில் ஒலிக்கிறது.நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.அதைக் கேட்டு வாங்கிப் போனாள்!.. அந்தக் கன்னி என்னவானாள்?. ஒரு கேள்வியோடு அந்த பல்லவியை முடித்த வாலி.அடடா!.. செயினையும் சேர்த்து எடுத்துக்கிங்க வாலி!.. மன்னர் பாரி வள்ளலாக மாற அதெல்லாம் வேண்டாங்க. உங்க அன்பு ஒன்றே போதும்.நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை!..காற்று வாங்கப்போன காதலனாக நாம் மாறிய கோலம்.கண் மீனாக சொல் தேனாக பாலாக பண்பாடும் பாவலனாக வாலி!..சிந்து நடை போடும் பாற்குடத்தை அவர் தான் நமக்குக் காட்டினார்.என்ன மேனியோ?. இன்னும் பாடவோ தமிழ் தேடவோ?. தேடாமல் வந்து விழும் வார்த்தைகள்.குளிர் காற்று கிள்ளாத மலரை பார்த்திருக்கிறீர்களா?. கிளி வந்து கொத்தாத கனி?. வாலியின் வரிகளில் பார்க்கலாம்.இதில் அசத்தியது அந்த நிழல் மேகம் தழுவாத நிலவு!.. எத்தனையோ நிலவுகளை கவிஞர்கள் தர இந்த நிலவு சம்திங் ஸ்பெஷல்!..நிறைய பருவத்தை பார்த்திருக்கிறோம்.பாய் விரித்த பருவத்தை எங்காவது பார்த்திருக்கிறோமா?. அதில் இளமையை பள்ளி கொள்ள வைத்த கவிஞன்.நிலவு மகள் வந்து நடை பயில நெஞ்சணையில் அவள் துயில் பயிலும் அழகை இந்தப் பாடலில் பார்க்கலாம்.வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும்.உண்மை தானே!..துணைக்கரம் இருந்தால் தொடக் கரம் வேண்டும்.காதலியாக மாறிய வாலி.காதலில் கட்டுண்டு கிடக்கும் ஜோடி!..முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும்.காதல் பாடம் கற்றவருக்குத் தெரியும்.ஆனால் படித்ததை முடித்தால் பல நாள் இனிக்கும்.இதை வாலியால் மட்டுமே சொல்ல முடியும்.
ஓடையிலே ஒரு தாமரைப் பூ கேட்டிருக்கிறீர்களா?. வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைவதென்ன கொடி தலை குனிந்து!.. காதலினால் வந்த நாணத்தை நாசூக்காகத் தரும் இலக்கியச் சுவையது.நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்!..காதலின் அவசியம்.ஆனால் தீயோடு பஞ்சைச் சேர்த்தாள் என பதறியிருப்பார் வாலி.இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வோளோ?. ஓரெழுத்து தொக்கி நிற்பது கூட அழகு தான்.குளிரில்லாத நிலவும் ஒளியில்லாத மலரும் அவளில்லாத நானும் அசத்தலான அனுபவம்.காதலோடு கம்யூனிஸம் பேசவும் அவரால் முடியும்.எம்.பி.ஸ்ரீனிவாசன் நிராகரித்த கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பக்கா கம்யூனிஸ்ட் சிந்தனை!..பன்னீரில் குளிப்பது மாளிகை நெஞ்சம் தன் கண்ணீரில் மிதப்பது ஏழைகள் உள்ளம்!..ஏழைகளுக்காக இரங்கும் நாயகன்.!..பல பாடல்களில் ஏழைகளின் இன்னல்களை வாலி பாட்டில் வைத்திருப்பார்.காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்.எல்லாக் காதலிலும் அவர் தான் கதாநாயகன்.நீலக் கடல் கொண்ட நித்திலமே!.. சத்தமில்லாமல் நித்திலத்தை தேடத் தோன்றும்.அகராதியைப் புரட்டினால் முத்தைத் தான் சொல்கிறார் என்பது பிறகே புரியும்.ஐ வகை அம்புகள் கைகளில் ஏந்திட மன்மதன் என்றொரு மாயவன் தோன்றும் நீல நயனங்களில் அந்த ஐ வகை அம்புகள் என்னென்ன?. கொஞ்சம் யோசிக்க வைப்பார்.
காதல் என்றொரு காய் கனிந்து பழுத்துவிட்டால் கிளையில் தங்குமா? . காதலன் பார்வையோ வேறு!..கைகளிலே விழுந்திடாமல் பசி அடங்குமா?.அர்த்த ராத்திரி பூஜையில் ஆசையென்ற ஊஞ்சலில் அந்த ஜோடியை அழகாக ஆடவிட்டிருப்பார் வாலி.இங்கும் அதே நெஞ்சமென்ற பஞ்சணை!..மன்னிக்க வேண்டுகிறேன் என டீஸண்டான காதலனுக்கும் பாடல் தந்தவர் வாலி.உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்.யம்மா!..என்னை சிந்திக்க வேண்டுகிறேன்.ப்ளீஸ்!..எவ்வளவு நாசூக்கான அப்ளிகேஷன்!..முதுமை வந்த பொழுதும் இளமை மாறாத அற்புதமான காதலது. என் கேள்விக்கென்ன பதில்?. இங்கொரு காதலன்.புன்னகை அள்ளி வர நடைபோடும் அந்தத் தோகையிடம் கேட்கிறான்.சம்மதம் என்றே தான் அந்த ஜாடை சொல்லிடுமே!.. அவள் படித்தவள்.இவனோ அப்பாவி!..விழி தானே சொல்லித் தரும்டா மக்குப் பயலே!..ஆனால் ஒரு நாளில் பழகிவிடும்!..சிறப்பான வரிகள் அந்த ஜோடிக்கு.அதில் வரும் அத்தானின் முத்தங்கள் அத்தனையும் அருமையான முத்துக்கள்.வாலிக்கு பிடித்தமான பாடலது.மன்மதன் சேனைகள் மந்திரம் பாடும் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?. கட்டும் கை வளை தொட்டும் மல்லிகை மொட்டும் உன்னுடன் ஓடும்.சிட்டுக் கண்கள் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்.மெட்டுக்குள் அடங்கிய வார்த்தை வித்தைகள் வாலிக்கும் சாத்தியம்.வேலாலே விழிகள் ஆலோலம் இசைக்கும் அழகு.நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட பத்தரை மாத்துத் தங்கம்.குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட பொங்கிடும் வெள்ளம் எங்கும்.வேகமாகச் செல்லும் மெட்டுக்களிலும் வழுக்காமல் செல்ல வாலியால் முடியும்.தழுவாதோ கைகள் தானாக!.. உன்னால் கனிந்தேன் கனியாக!..ஆழமான நதியாக அமைதியாக நடக்கவும் அவரால் முடியும்.யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனைச் சேரும் பெண்மையை அசத்தலாகச் சொல்ல அவரால் முடியும்!..மேகத்தை ஊஞ்சலிட்டு ஆட வைக்க அவரால் மட்டுமே முடியும்.மோகத்தை ஆடையிட்டு மூடி வைக்கவும் தெரியும்.ஆனந்த நாடகத்தை ஆட வைக்கும் எத்தனை எத்தனை திரைப் பாத்திரங்கள்!..ஆரம்ப நாளை எண்ணி காத்திருக்கும் எத்தனை எத்தனை நேத்திரங்கள்!.. சொல்வதற்கு இன்னும் ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது வாலியின் பாடல்கள்!.. அந்த கானச் சமுத்திரத்தில் சிதறிய சிறு துளிகள் தான் நாம் இப்போது சுவைத்தது.இன்னும் பேச நிறைய இருக்கிறது.கட்டுரை நீளும் என பயப்படுகிறேன்.மீண்டும் வருகிறேன் வாய்ப்புக் கிடைத்தால்!.. வாலியின் புகழ் பாட!..
Abdul Samath Fayaz


