TamilsGuide

முச்சக்கர வண்டி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு - 3 மாணவர்கள் காயம்

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (22) காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், 3 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டியின் சாரதியும், அதிலிருந்த மற்றொரு நபருமே இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சமயத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டி அதிக வேகத்துடன் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மூவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை வேளையில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத விபத்து நேர்ந்துள்ளமை அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment