TamilsGuide

உலகக் கிண்ண FIFA இறுதிப் போட்டி முடிந்ததும் அடிதடி! மைதானத்தில் நடந்தது என்ன?

2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இரு அணிகளின் வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் ஏற்பட்ட கடும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போட்டி முடிவடைந்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் லியாண்ட்ரோ பரேடேஸ் (Leandro Paredes) தொடர்பாக ஆரம்பத்தில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

எனினும், பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில், பரேடேஸுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டி முடிவடைந்த பின்னர் சம்பவம் இடம்பெற்றதால், நடுவர்கள் அதில் அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

போட்டியின் இறுதி விசில் ஒலித்த சில நிமிடங்களில், இரு அணிகளின் வீரர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகளில், பரேடேஸ் ஸ்பெயின் பின்கள வீரர் எரிக் கார்சியாவுடன் மோதலில் ஈடுபடுவதும், அவரை தள்ளுவதும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஸ்பெயின் வீரர் காவியையும் (Gavi) அவர் தள்ளியதாகவும், இதன்போது காவி தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

பல ஊடக அறிக்கைகளின்படி, இந்த மோதலுக்கு ஆரம்ப காரணமாக அமைந்தது அர்ஜென்டினா வீரர் நஹுயல் மோலினாவின் செயற்பாடாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மோலினா ஸ்பெயின் அணித் தலைவர் ரோட்ரியை நோக்கி ஆவேசமாகச் சென்றதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் வீரர்கள் எரிக் கார்சியா உள்ளிட்டோர் ரோட்ரிக்கு ஆதரவாக வந்ததாகவும், அதன் பின்னரே மோதல் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றபோது, அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி வீரர்களை அமைதிப்படுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ணம் போன்ற மிகப்பெரிய போட்டியின் இறுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், வீரர்களின் நடத்தை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
 

Leave a comment

Comment