TamilsGuide

மத்திய கிழக்கு நெருக்கடி - வேகமெடுக்கும் திருகோணமலை எண்ணெய் திட்டம்

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத் திட்டத்தை வர்த்தக ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், தமது கட்டுப்பாட்டில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 29 தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச டெண்டர் கோருவதற்கு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை கூட்டு அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு திருகோணமலை பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் (TPTL) நிறுவப்பட்டது.

இந்த கூட்டு நிறுவனத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 51 சதவீத பங்குகளையும், இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா ஐஓசி (Lanka IOC) 49 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன. GeographicReference

இரு தரப்புகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் கீழ், திருகோணமலை எண்ணெய் களஞ்சிய வளாகத்தில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 61 தாங்கிகள் கூட்டு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுக்கிடையில் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழி எரிசக்தி விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் பல்நோக்கு எரிசக்தி குழாய் (Multipurpose Pipeline) திட்டத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.

மேற்கு ஆசியா அல்லது மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியின் பின்னணியில், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை பெற்றோலிய மையத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கையும் இந்தியாவும் வலியுறுத்தியுள்ளன. 

எனினும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட காலக்கெடு இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

இது தொடர்பாக அறிந்த வட்டாரமொன்று தெரிவிக்கையில், எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரும் அறிவிப்பு அடுத்த ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. 

பின்னர் கிடைக்கும் முன்மொழிவுகளை நிறுவனம் மதிப்பீடு செய்த பின், இறுதி முடிவெடுப்பதற்காக அது மீண்டும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவுக்கு  அனுப்பப்படவுள்ளது.

எரிசக்தி பாதுகாப்புத் துறையில் இந்தியா–இலங்கை ஒத்துழைப்பின் முக்கிய மையமாக திருகோணமலை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்தியா–இலங்கை ஒப்பந்தத்தில், திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து முதன்முறையாக உத்தியோகபூர்வமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, 2002 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில், இலங்கையில் எரிபொருள் விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளில் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOC) பங்கேற்பதற்கான ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டன.

அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. GeographicReference
 

Leave a comment

Comment