TamilsGuide

சட்டவிரோத சொத்துக்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு – அரசிடம் UNP வலியுறுத்தல்!

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 09 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைமுதலீட்டு வழிகாட்டி

முறையான வழிகாட்டுதல்கள் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பினால், கிராமப்புற மக்கள் கடுமையான துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையில் (Report of Independent Inquiry) குறிப்பிடப்பட்டுள்ள ‘பொது நோக்கங்கள் பற்றிய கூற்றுக்கு’ (Statement of Common Purpose) அமைவாக, சட்டத்தையும் அமைதியையும் பாதுகாப்பது, சட்டவிரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது மற்றும் அமைதியைப்பேணுவது ஆகியவையே பொலிஸின் முக்கிய கடமையாகும் என்றும், பொலிஸாரின் இந்த அறிவிப்பு மூலம் அந்த அடிப்படை கொள்கை மீறப்படுவதாகவும் ஐ.தே.க குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சொத்து வரி (Wealth Tax) இல்லாத நிலையில், கிராமப்புறங்களில் உள்ள பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு சட்டப்பூர்வ வழிகளில் சொத்துக்களை ஈட்டுகின்றனர். வரி முறைமை பற்றிய புரிதல் இன்மையால், சிலர் தாங்கள் ஈட்டிய சொத்துக்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

தெளிவான சட்டப்பூர்வ வருமான மூலம் இன்றி ஈட்டப்பட்ட சொத்துக்கள் எவை என்பதை தீர்மானிப்பதற்கு குறிப்பிட்ட நடைமுறைகள் எதுவுமில்லாத நிலையில், இது பொதுமக்களை துன்புறுத்துவதற்கான ஒரு கருவியாக மாறக்கூடும் என அக்கட்சி எச்சரித்துள்ளது.

இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி தெளிவான வழிகாட்டுதல்களை தயாரித்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மிகவும் குறிப்பிட்ட மற்றும் தெளிவான அறிவிப்பை வெளியிடுமாறு கட்சி பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

Leave a comment

Comment