ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-ஆவது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் நேற்று (திங்கள்கிழமை) இரவு அறிவித்தது.
மற்றொரு அமெரிக்க ராணுவ வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத், ஜோர்டான் மற்றும் அமெரிக்க கடற்படையின் 5-ஆவது கடற்படைப் பிரிவு (5th Fleet) அமைந்துள்ள பஹ்ரைன் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நம்பிக்கைக்குரிய அறிகுறிகள்:
ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஈரானின் ராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (US Central Command) சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒரு முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ராஜதந்திர ரீதியில் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் தென்படுகின்றன; இமோதலில் முக்கிய மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஈரானின் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளார்.
சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் முறிந்துவிட்டது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. மேலும், சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக்கியுள்ளனர்.
புதிய அச்சுறுத்தல்:
போரின் போது எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று பாதையான செங்கடல் வழியாக சவூதி அரேபியா கப்பல் போக்குவரத்து செய்வதை தடுக்க திட்டமிட்டுள்ளதாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கூறியதை அடுத்து, உலக எரிசக்தி சந்தைகளுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் உருவாகி இருக்கிறது.
இந்த பதற்றம் சமீப வாரங்களில் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. திங்களன்று, பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டாலருக்கும் அதிகமாக வர்த்தகமானது. மேலும், அமெரிக்காவில் சாதாரண பெட்ரோல் ஒரு கேலன் சராசரியாக 4 டாலராக உயர்ந்தது.
டிரம்ப் எச்சரிக்கை:
ஜோர்டானில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரண்டு வீரர்களை அமெரிக்க இராணுவம் அடையாளம் கண்டுள்ளது; இதில் மூன்றாவது நபர் காணாமல் போயுள்ளார். இதற்கிடையில், ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானத்தை "கட்டுப்பாட்டுடன் வெடிக்கச் செய்த" போது சனிக்கிழமையன்று மற்றொருவர் உயிரிழந்ததை இராணுவம் உறுதிப்படுத்தியது.
"ஒவ்வொரு முறையும் ஈரான் ஒரு அமெரிக்க வீரரைக் கொல்லும்போது, அந்தக் கொலைக்கு அவர்கள் பல மடங்கு விலை கொடுப்பார்கள்!" என்று அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக ஊடகங்களில் எச்சரித்தார்.


