ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சபஹார் துறைமுக நகரில் அமைந்துள்ள சபஹார் ஷஹீத் கலந்தாரி துறைமுக கண்காணிப்பு கோபுரம் இலக்கு வைத்து தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் மூலம், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை கண்காணித்து இலக்குவைப்பதற்கும், பொதுமக்களின் கப்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குமான IRGC-யின் திறன் பலவீனமடையும் என CENTCOM தெரிவித்துள்ளது.
மேலும், ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீற முயற்சிக்கும் கப்பல்களைத் தவிர, பிராந்திய கடற்பரப்பில் பயணிக்கும் பிற கப்பல்களின் தடையற்ற கப்பற்போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.


