TamilsGuide

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

மெக்சிகோவின் தென்கோடி மாநிலமான சியாபாஸின் கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சால்வடாரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன.

நிலநடுக்கத்தால் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் 15.2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை:

நில அதிர்வை தொடர்ந்து, நிலநடுக்க மையத்தில் இருந்து 300 கிலோமீட்டர்கள் (186 மைல்கள்) தொலைவிற்குள் அமைந்துள்ள கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் சில கடற்கரைகளில், இந்த அலைகள் ஓத மட்டத்திலிருந்து 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை உயரத்தை எட்டக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.

மெக்சிகோவின் கடற்படைச் செயலாளர் ரேமுண்டோ மொரேல்ஸ், நீர்மட்டம் அரை மீட்டருக்கு மேல் உயர வாய்ப்பில்லை என்று கூறியபோதிலும், தற்போதைக்கு மக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

நியூசி. நிலநடுக்கம்:

முன்னதாக நேற்று (ஜூலை 16) நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.

டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.

Leave a comment

Comment