TamilsGuide

உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம் 

ரஷியாவுடன் போரிட்டு வரும் வேளையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரை அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்கியுள்ளார்.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சராக 35 வயது மிகைலோ பெடோரோ பதவியேற்ற ஆறே மாதங்களில் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் ராணுவத்தில் நவீன டிரோன் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து ரஷிய எல்லைக்குள் புகுந்து பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதால் இவர் அங்கு 'டிரோன் போரின் தந்தை' என்று மக்களால் கொண்டாடப்பட்டவர்.

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி அலக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சர் பெடோரோவிற்கும் இடையே போர் வியூகம் தொடர்பாக ஏற்பட்ட மோதலே அவரை ஜெலன்ஸ்கி நீக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

எதிர்காலப் போர் டிரோன்கள் மூலமே நடக்கும் என்று பெடோரோவ் வாதிட, தரைப்படை தான் முக்கியம் என்று தலைமை தளபதி சிர்ஸ்கி பிடிவாதமாக இருந்தார்.

இந்த மோதலில் அதிபர் ஜெலென்ஸ்கி ராணுவத் தலைமையின் பக்கம் சாய்ந்து அமைச்சரை நீக்கியுள்ளார்.

மேலும், ராணுவத் தளவாடக் கொள்முதலில் பெடோரோவ் கொண்டு வந்த டிஜிட்டல் சீர்திருத்தங்கள், பெரிய கார்ப்பரேட் ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர்களும் இவருக்கு எதிராகத் திரும்பினர்.

பாதுகாப்பு அமைச்சரின் இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

தலைநகர் கீவ், ஒடேசா, எல்விவ் மற்றும் கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

"ராணுவ தலைமை தளபதி சிர்ஸ்கி வெளியேற வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் விமானப்படையின் துணை கமாண்டர் கர்னல் பாவ்லோ யெலிசரோவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போதைய சூழலில், தொழில்நுட்ப அமைச்சரின் நீக்கம் போர்க்களத்தில் உக்ரைனின் பலவீனத்தை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment