#தமிழுக்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கப்படும் #நவாலியூர்_சோமசுந்தரப்_புலவர்
( 25.05.1878 - 10.07.1953 )
யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் 1878 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதோடு ஆங்கிலத்தையும் கற்றார்.
சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். 'அட்டகிரி முருகன் பதிகம்', 'அட்டகிரி முருகன் திருஊஞ்சல்', 'சாவித்திரி கதை', 'பசுவின் கதை' உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை.
வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கி அங்கு நாற்பது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி தமிழ், ஆங்கிலம் மற்றும் இதிகாசங்களைக் கற்பித்தார்.
‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமய பாடங்களைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தினார்.
பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள்ளார். 400 இற்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தமானது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு.
யாப்பிலக்கணங்களைக் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். 'சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910 இல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927 இல் ஈழத்துத் தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். குழந்தைகளுக்கான 'ஆடிப்பிறப்பு', 'கத்தரிவெருளி', 'புளுக்கொடியல்', 'பவளக்கொடி', 'இலவுகாத்த கிளி' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி "சிறுவர் இலக்கிய முன்னோடி" என்ற பெருமை பெற்றார். 'தாடி அறுந்த வேடன்', 'எலியும் சேவலும்' உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை. ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
Babu Babugi


