TamilsGuide

எம்.ஜி.ஆர், சிவாஜி,ஜெமினி என்கிற இந்த மூவேந்தர்களின் கலைப்பயணம்..

தமிழ் திரை என்னும் வானில் எம்ஜிஆர் சூரியனாகவும், சிவாஜி கணேசன் சந்திரனாகவும் இந்த இருவரும் இருந்த சமயத்தில் அதே வானத்தில் சில நட்சத்திரங்களும் இருந்தன. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா காலக்கட்டத்தில், அந்த இருபெரும் ஆளுமைகளைத் தாண்டி மூன்றாமவராக டி.ஆர்.மகாலிங்கம் எப்படி பிரகாசித்தாரோ, அதைப் போலவே எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் மூன்றாமவராக ஜொலித்தவர் ஜெமினி கணேசன். 'மூவேந்தர்கள்' என்று அழைக்கப்படுமளவிற்கு எழுபதுகளின் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்னும் வரிசை அமைந்தது.
ஜெமினி கணேசனின் கலை ஆர்வத்துக்கு முதலில் விதை போட்டவர் அவரது தந்தை ராமசாமி. புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசனின் தாத்தா எஸ். நாராயணசாமி, புகழ்பெற்ற வழக்கறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை மன்னருக்கு கல்வி புகட்டிய ஆசிரியர். புதுக்கோட்டை அரசர் கல்லூரியை உருவாக்கி, அதற்கு முதல்வராகவும் திகழ்ந்தவர். ஜெமினி கணேசனின் அத்தையோ அகில இந்தியாவும் அறியப்பெற்றச் சமூகப் புரட்சியாளரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தேவதாசி முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை ஒழித்துக்கட்டச் சட்டங்களை முன்மொழிந்தவர்.
இரண்டு வயதில் தொடங்கி, தனது தந்தை ராமசாமியிடமிருந்து மிருதங்கம், புல்லாங்குழல், வீணை ஆகியவற்றை ஜெமினி கற்றுக்கொண்டார். பத்து வயதில், கலை சொல்லித் தந்த தந்தையையும் கல்வியே முக்கியம் என்று படிப்பித்த தாத்தாவையும் இழந்தார். பின் அத்தையின் அரவணைப்பில் சென்னையில் வளர்ந்தார்.
ஜெமினி கணேசன், தனது அத்தை டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி அவர்களை போன்று, மருத்துவர் ஆக வேண்டும் என்றே கனவு கண்டார். ஆனால், அவரால் மருத்துவர் ஆக முடியாமல் போகவே இந்திய விமானப் படையில் சேர வேண்டும் என முயற்சி எடுத்தார். ஆனால் அவரது உறவினர் ஆசிரியராகும்படி யோசனை கூறவே மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, கெமிஸ்ட்ரி துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
அலமேலு என்கிற பாப்ஜியை கரம் பற்றி இல்லறத்தில் இணைந்தார். அதன் பிறகு தான் ஜெமினி ஸ்டுடியோவில் புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவாக பணியில் சேர்ந்தார். சிவாஜியைப் போலவே ஜெமினிக்கும் இயற்பெயர் 'கணேசன்' என்பதால் தான் பணிபுரிந்து கொண்டிருந்த சினிமா ஸ்டூடியோவின் பெயரை முன்னால் சேர்த்துக் கொண்டார் ஜெமினி கணேசன். ஆம்... ஜெமினி பட தயாரிப்பு நிறுவனத்தில் காஸ்ட்டிங் டைரக்டராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் தான் ஜெமினி கணேசன். 'மிஸ் மாலினி்' என்கிற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி பிறகு தென்னிந்திய மொழிகளில் பலவற்றில் நடித்து சாதனை புரிந்தார்.
சில நபர்கள் தோற்றத்தில் கவர்ச்சிகரமாக இருப்பார்கள். நடிப்பிலும் அத்தனை குறை சொல்ல முடியாது. ஆனால் எத்தனை முட்டி மோதினாலும் முதலாம் இடத்திற்கு அவர்களால் வரவே முடியாது. இந்த வரிசையில் சிவகுமார், சரத்பாபு என்று பல நடிகர்களை உதாரணம் சொல்ல முடியும். மக்களை பெருமளவிற்கு ஈர்க்கும் காந்தசக்தி (charisma) என்பது சிலருக்கு மட்டும்தான் இயற்கையில் அமைகிறது.
எம்.ஜி.ஆரைப் போலவே வசீகரமான தோற்றம் ஜெமினிக்கு உண்டு. சிவாஜியைப் போல உணர்ச்சிகரமாகவும் ஒரளவுக்கு நடிக்க வரும். என்றாலும் இவரைப் போன்ற நடிகர்கள் பார்வையாளர்களால் மெலிதான கேலிக்கு ஆளாவதுண்டு. அந்த வகையில் ஜெமினி கணேசனின் மென்மையான நடிப்பை பார்த்த அந்த காலத்து ரசிகர்கள், இவருக்கு 'சாம்பார்' என்கிற அடைமொழியை வழங்கி சந்தோஷப்பட்டார்கள். ஆண் ரசிகர்கள் இப்படி கிண்டல் செய்தாலும் ஜெமினி கணேசனுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தார்கள். பொலிவான முகத்தோற்றம், அழகான சுருள்முடி, மென்மையான குரல் போன்ற அம்சங்களைக் கொண்டிருந்ததால் இவரை பெண்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். 'காதல் மன்னன்' என்கிற பட்டமும் இவருக்கு எளிதாக கிடைத்தது.

எம்.ஜி.ஆர் நிஜத்திலும் நிழலிலும் தன் பிம்பத்தை கவனமாக பாதுகாத்தார். சிவாஜியோ திரையில் தன் பிம்பத்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் ஜெமினி கணேசனோ நிஜத்திலும் சரி, நிழலிலும் சரி, 'காதல் மன்னனாகவே' திகழ்ந்தார். தனது 'காஸனோவா' பிம்பத்தைப் பற்றி கவலைப்படாதது மட்டுமல்ல. அதை புன்னகையுடன் பொதுவெளியில் ஒப்புக் கொள்ளவும் செய்தார். முதல் மனைவி அலமேலுவைத் தவிர, நடிகை புஷ்பவல்லி, சாவித்திரி என்று இவர் செய்த காதல் திருமணங்களின் பட்டியல் நீண்டது. அந்திமக் காலத்தில் கூட ஜூலியானா என்கிற பெண்ணை திருமணம் செய்து சாதனை படைத்தார். இவையெல்லாம் அதிகாரபூர்வ கணக்குகள் மட்டுமே. நடிகை புஷ்பவல்லியின் மூலம் பிறந்த மகள்தான் பின்னாளில் புகழ்பெற்ற இந்தி நடிகை ரேகா.
எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகவும் சிவாஜி நடிகர் திலகமாகவும் தங்களது நட்சத்திர சாம்ராஜ்ஜியத்தை நிறுவிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், அவர்களுக்கு இணையாக புராண, சரித்திர, சமூகப் படங்களில் நடித்து ‘காதல் திலகம்’ ஆனதன் பின்னணியில் இருந்தவை ஜெமினி கணேசனின் பன்முகத் திறமைகள்தாம். எம்.ஜி.ஆர்., சிவாஜியைப்போல ‘பாய்ஸ் கம்பெனி’ நாடக அனுபவம்கூட ஜெமினியிடம் கிடையாது.
ஆனால், அபார நடிப்புத் திறமையுடன், ஒரு கதாநாயகனுக்குத் தேவையான அத்தனை திறமைகளும் அவரிடம் கொட்டிக் கிடந்ததை கண்டுகொண்டார்கள் கதையை நம்பிக் காவியங்கள் படைக்க முயன்ற சாதனை இயக்குநர்கள். எனவே, இமாலய பிம்பங்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிக்காக காத்திருக்காமல் ஜெமினி கணேசனை நாடிவந்தார்கள். தன்னை நம்பி வந்த படைப்பாளிகளுக்கு பணிவு காட்டும் துணிவு ஜெமினியிடம் இருந்தது. அதனால், அடுத்த இருபது ஆண்டுகளில் ‘ஹீரோயிசம்’ இல்லாத சமூகப் படைப்புகளில் அதிகமாகப் பங்கேற்ற ஜெமினி கணேசன் தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிப்போனார்.
கதைதான் கதாநாயகன் என்று நம்பிய கே.ராம்நாத், பி.புல்லையா, ஆர்.பிரகாஷ் ராவ், எல்.வி.பிரசாத் போன்ற முதுபெரும் சாதனை இயக்குநர்களின் இயக்கத்தில் தன் திரைப் பயணத்தை தொடங்கியவர் ஜெமினி. அதன் பின்னர் ‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பார்த்தால் பசி தீரும்’ ஆகிய படங்களில் பீம்சிங்கும், ‘கற்பகம்’, ‘சித்தி’ என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும், ‘கல்யாணப் பரிசு’, ‘மீண்ட சொர்க்கம்’, ‘தேன் நிலவு’. சுமைதாங்கி’ என தரும், ‘புன்னகை’, ‘இரு கோடுகள்’, ‘காவியத் தலைவி’, ‘பூவா தலையா’, ‘வெள்ளி விழா’, ‘உன்னால் முடியும் தம்பி’ என கே.பாலசந்தரும் ஜெமினியை பல பரிமாணங்களில் கதாபாத்திரங்களாக நமக்குப் பந்தி வைத்தவர்கள்.
‘காதல் மன்னன்’ எனும் முத்திரையைக் கடந்து நிற்கும் நடிப்புக் கலைஞன் ஜெமினி என்பதை அடையாளம் காட்டினார்கள். பிற்காலத்தில் 'உன்னால் முடியும் தம்பி்', 'அவ்வை சண்முகி' போன்ற திரைப்படங்களில் மாறுதலான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் செயலாக இருந்த காலக்கட்டத்தில் இவரை 'ரொமான்ஸ் ஹீரோ' என்கிற கூண்டிலேயே பெரும்பாலும் போட்டு அடைத்து வைத்திருந்தார்கள்.
இவரும் ‘'பாடு சாந்தா பாடு’' என்று கன்றுக்குட்டி பாலுக்கு குரல் தருவது போன்ற மென்மையான குரலில் நெகிழ்ந்து, அழுது, காதல் செய்து, கதறித் தீர்த்து... ஏராளமாக நடித்து தீர்த்து விட்டார். முக்கோண காதல் கதை என்றால் 'கூப்பிடு ஜெமினி'யை என்று சொல்லி விடுவார்கள் போல. அந்தளவிற்கு 'கல்யாணப் பரிசு' முதற்கொண்டு இரண்டு பெண்களின் நடுவே சிக்கித்தவிக்கும் பரிதாபமான காதலன் பாத்திரங்கள் நிறைய வந்தன. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், பாலசந்தர் என்று சில குறிப்பிட்ட இயக்குநர்கள், ஜெமினி கணேசனின் ஆளுமையை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் இரு நடிகர்களுக்கு என்று தனித்தனி கோஷ்டிகள் உருவாகி இருந்தன என்பதை முன்பே பார்த்தோம். தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் முதற்கொண்டு அந்தந்த கோஷ்டியில்தான் பெரும்பாலும் இயங்குவார்கள். எதிர் கோஷ்டிக்கு செல்ல தயங்குவார்கள். எம்.எஸ்.வி, கண்ணதாசன், ஆரூர்தாஸ் போன்ற திறமைசாலிகளால்தான் இரு தரப்பு நடிகர்களிடமும் பணியாற்ற முடிந்தது. இந்த நோக்கில் ஜெமினி கணேசனை 'சிவாஜி கோஷ்டி' என்று சொல்லி விடலாம். 'பாசமலர்' முதற்கொண்டு சிவாஜி + ஜெமினி காம்பினேஷன் என்பது 25 திரைப்படங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக அமைந்தது.
'கட்டபொம்மன்' நாடகம்தான் இளம் வயதில் சிவாஜிக்கு நடிப்பு என்கிற கனவை ஊட்டியது. எனவே சிவாஜி பின்னாளில் வெற்றிகரமான ஹீரோவாக ஆன பிறகு, இளம் வயதில் தனக்கு லட்சியப் பாத்திரமாக தெரிந்த 'கட்டபொம்மனை' வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டார். இதில் 'வெள்ளையத் தேவன்' என்கிற உணர்ச்சிகரமான பாத்திரத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனை நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் எஸ்.எஸ்.ஆர், நடிக்க முன்வரவில்லை. இதே சமயத்தில் 'கட்டபொம்மனுக்கு' போட்டியாக 'சிவகங்கைச் சீமை' என்கிற திரைப்படம், கண்ணதாசனின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்தது. எஸ்.எஸ்.ஆர், 'சிவகங்கை சீமை'யில் நடிக்கச் சென்று விட்டார்.
'சிவகங்கைச் சீமை'யை விடவும் 'கட்டபொம்மன்' திரைப்படம்தான் பிறகு பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது. சிவாஜிக்கு கூடுதல் புகழையும் தேடித் தந்தது. பின்னர் சினிமாவிற்கு நடிக்க வாய்ப்பு தேடி வருகிற இளைஞர்களில் பெரும்பாலும் 'வானம் பொழிகிறது.' வசனத்தைத்தான் பேசிக் காட்டி இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்க ஆரம்பித்தார்கள். இன்றளவிற்கும் புகழ்பெற்ற திரைப்படமாக 'கட்டபொம்மன்' திகழ்வதற்கு சிவாஜியின் அற்புதமான நடிப்பும், பி.ஆர். பந்துலுவின் நேர்த்தியான இயக்கமும்தான் காரணம். அவசர சமயத்தில் சிவாஜிக்காக நடித்துத் தரும் அளவிற்கு ஜெமினி கணேசனின் நட்பு அமைந்திருந்தது.
சிவாஜியுடன் அதிக திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் இணைந்து நடித்தது ஒரேயொரு திரைப்படத்தில்தான். 1966-ல் வெளியான 'முகராசி' என்கிற திரைப்படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்திருந்தார் ஜெமினி. இந்தப் பாத்திரத்திற்கு அசோகன், கே.பாலாஜி, சக்ரபாணி போன்ற 'எம்.ஜி.ஆர் கோஷ்டி' நடிகர்கள் முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும் ஜெமினி கணேசனை நடிக்க வைக்க முடிவு செய்தது எம்.ஜி.ஆர்தான்.
ஏனெனில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமானவர்கள் எல்லாம் அடுத்த திரைப்படங்களில் ஜெமினிக்கு நாயகியாக நடிப்பது ஒரு தற்செயலாக அமைந்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஜெமினியின் மீது எம்.ஜி.ஆருக்கு கோபம் என்கிற வதந்தி அப்போது உலவியது. இதைப் போக்குவதற்காக ஜெமினியை தன் திரைப்படத்தில் தேடி அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர் என்று சொல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆர், சிவாஜி,ஜெமினி என்கிற இந்த மூவேந்தர்களின் கலைப்பயணம், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களைப் பற்றிய மக்களின் பார்வை போன்றவற்றை கவனித்தால் அவர்கள் தானாக ஏற்படுத்திக் கொண்ட அல்லது தன்னிச்சையாக உருவான பிம்பம்தான் அவர்களின் பயணத்தை தீர்மானித்தது.

 

Sampatth Kumar

Leave a comment

Comment