TamilsGuide

கனடாவில் வீசா நடைமுறையில் ஏற்படும் மாற்றம்

குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ், கனடாவுக்குத் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டியை நிரந்தரக் குடியுரிமையுடன் அழைப்பதற்கான புதிய விண்ணப்பங்களை இந்த ஆண்டு ஏற்கப்போவதில்லை என்று கனடா மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடிவரவு அமைப்பை முறையாக நிர்வகிக்கவும், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான இடங்களின் எண்ணிக்கையை விட, விண்ணப்பிப்பவர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருப்பதே இந்த தற்காலிகத் தடைக்குக் காரணம் என்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களைச் சரிபார்த்து முடிக்க சராசரியாக 33 மாதங்கள் ஆகின்றன.

கியூபெக் மாகாணத்தில் இந்த காத்திருப்பு காலம் 66 மாதங்கள் வரை நீடிக்கிறது. இத்திட்டம் முதன்முதலில் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, தங்களது பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியை அழைக்க 2 லட்சத்திற்கும் அதிகமான கனடா குடிமக்களும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் ஆர்வம் காட்டியிருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், இதில் இருந்து ஆயிரக்கணக்கானோர் முறைப்படி விண்ணப்பிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

புதிய விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், அரசின் குடிவரவு நிலை உத்தியின்படி, 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் தலா 15,000 பேருக்கு நிரந்தரக் குடியுரிமை ஒப்புதல் அளிக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று குடிவரவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விண்ணப்பங்களுக்கான தடை "மறுஅறிவிப்பு வரும் வரை" அமலில் இருக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.

எனினும், கனடா குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டியை தற்காலிகமாக கனடாவுக்கு அழைக்க "சூப்பர் விசா" (Super Visa) மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த விசாவைப் பயன்படுத்தி அவர்கள் ஒருமுறை வந்தால் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை தங்க முடியும். இந்த விசா ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment