TamilsGuide

கனடாவில் பரபரப்பு - பொலிஸாரை தாக்க முயன்ற குற்றவாளி சுட்டுக் கொலை

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் புரூக்ஸ் நகரில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் கிரீன்புரூக் வில்லேஜ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு வீட்டில் நீதிமன்ற வாரண்ட் மூலம் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஒருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த குற்றவாளி தப்பியோட முயன்றுள்ளார். பொலிஸார் அவரைத் தடுக்க முயன்ற போது, அந்த நபர் திடீரென தன்னிடம் இருந்த ஆயுதம் ஒன்றை எடுத்து போலீசாரை நோக்கி மிரட்டி தாக்க முயன்றுள்ளார்.

இதனால் தற்காப்புக்காக அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் அந்த நபரை நோக்கிச் சுட்டார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சரிந்த அந்த நபருக்கு, அதிகாரிகள் உடனடியாக முதலுதவி வழங்கி உயிரைக் காப்பாற்ற முயன்றனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மோதலில் பொலிஸ் அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் நபர் பலியானதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க மாகாணத்தின் காவல்துறை கண்காணிப்பு அமைப்பு வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், காவல்துறை தங்களுக்குள்ளாகவும் இது குறித்து உள்வட்டார விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 

Leave a comment

Comment