துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தற்போதைய செயற்பாடுகள், முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை துறைமுக அதிகார சபை, விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேடரிங், இலங்கை சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைவணிகம்
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள், காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
அத்துடன், கொழும்பு துறைமுக லொஜிஸ்டிக் பார்க் அமைத்தல், தெற்கு துறைமுகத்தின் அலைதடுப்புச் சுவர் விரிவாக்கம், மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி மற்றும் துறைமுக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்திறனை அதிகரிக்கும் அபிவிருத்தித் திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக அதிகரிக்கும் இலக்குடன் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
2027ஆம் ஆண்டுக்குள் விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களை விரிவுபடுத்துதல், புதிய முனையத்தை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மத்தல விமான நிலையம் எதிர்நோக்கும் நிதி இழப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், முதலீட்டு வாய்ப்புகள் மூலம் அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
யாழ்ப்பாண விமான நிலைய பயணிகள் முனையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிறுவனங்கள் தமது நிதி வளங்களை திறம்பட பயன்படுத்தி, அரச நிதிக்கு சுமையாக இல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.


