TamilsGuide

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி என்ற உயரிய நோக்குடன் செயற்பட்ட காமராசர்

1903-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15-ஆம் நாள் விருதுப்பட்டியில் (இன்றைய விருதுநகர்) தோன்றிய ஒரு கருப்பு வைரத்தால் தமிழகமே ஒளிபெற்றது. சிவகாமி அம்மையாரின் செல்வனாய்த் தோன்றிய அந்த வைரம், தமிழ்த்தாய் நெடுங்காலம் செய்த தவத்தால் தமிழகத்துக்குக் கிடைத்த வரம்!
மணிமேகலைக் காப்பியத்தின் தலைவியான மணிமேகலை, தன் கையிலிருந்த அமுதசுரபி எனும் அட்சய பாத்திரத்தின் உதவியால் சிறைச்சாலையிலிருந்தோரின் பசியைப் போக்கி, சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றினாள் என்பார் சீத்தலைச் சாத்தனார்.
அதுபோல், தாம் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின்மூலம் ஏழைக் குழந்தைகளின் பசிப்பிணியை நீக்கிக் கல்விச்சாலைகளை அறச்சாலைகளாக்கி, எளியோரின் வாழ்வில் அறிவொளி ஏற்றிய கர்மவீரர் காமராசரை, மணிமேகலையின் ஆண் வடிவம் என்று கருதினால் அது மிகையன்று.
கர்மவீரரின் கல்விச் சீர்திருத்தங்களால், வெள்ளையர் ஆட்சியில் வெறும் ஏழு விழுக்காடாக இருந்த மாணவர் சேர்க்கை, அவரது ஆட்சிக் காலத்தில் முப்பத்தேழு விழுக்காடாக உயர்ந்தது. பள்ளிகளின் வேலைநாள்களை 180-இலிருந்து 200-ஆக உயர்த்தினார். ஓராசிரியர் பள்ளிகளை நிறுவியதும் அவரது ஆட்சியின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
"ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி" என்ற உயரிய நோக்குடன் செயற்பட்ட காமராசர், சுமார் 12,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் தொடங்கியதோடு, மூடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பள்ளிகளை மீண்டும் திறக்கவும் வழிவகுத்தார். ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளும் கல்விகற்க வேண்டும் எனும் அவரது உறுதியே, தமிழகத்தைக் கல்வியில் முன்னேறிய மாநிலங்களுள் ஒன்றாக உயர்த்தியது. 

அம்மட்டோ? பணிஓய்வு பெற்றுவிட்ட ஆசிரியர்கள் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சங்கடப்படக்கூடாதே என்ற நல்லெண்ணத்தோடு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் காமராசரே.
தோற்றத்திலும் வாழ்விலும் அண்ணல் காந்தியின் எளிமையையும், சிந்தனையில் பண்டித நேருவைப் போன்ற உயர்ந்த இலக்குகளையும் ஒருங்கே பெற்றவர் காமராசர். அதனாலன்றோ, "தொழிற்சாலைகளே நான் வணங்கும் ஆலயங்கள்" என்ற நேருவின் கனவை நனவாக்கும் வகையில் தமிழகமெங்கும் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் அவர் பெரும் பங்காற்றினார். அவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), போன்றவை தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளங்களாக அமைந்தன.
கல்வியிலும் தொழில்துறையிலும் மட்டுமல்லாது, வேளாண்துறை வளர்ச்சியிலும் அவரது தொலைநோக்குப் பார்வை வெளிப்பட்டது. வைகை அணை, சாத்தனூர் அணை, மணிமுத்தாறு அணை, கிருஷ்ணகிரி அணை போன்ற பல நீர்ப்பாசனத் திட்டங்கள் அவரது ஆட்சியில் உருவாக்கப்பட்டு, இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. "உழவர் செழித்தால் நாடு செழிக்கும்" என்பதைத் தம் செயலால் நிரூபித்த தலைவர் அவர்.
காமராசரின் செயற்திட்டங்களில் மைல்கல்லாகக் கருதத்தக்கது, ஆட்சிப் பொறுப்பை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, முதியவர்கள் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனும் நோக்கில் அவர் அறிமுகப்படுத்திய "கே-பிளான்" (K-Plan) ஆகும். அதற்கு முன்மாதிரியாகத் தாமே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, அப்பொறுப்பை, திரு. பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து, நேருவையே வியப்பில் ஆழ்த்திய உன்னத மனிதர் காமராசர்.
இந்திய அரசியலிலும் அவரது பங்கு அளப்பரியது. பண்டித நேருவின் மறைவுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரியையும், பின்னர் திருமதி இந்திரா காந்தியையும் இந்தியாவின் பிரதமர்களாகத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றியதால், இந்திய அரசியலின் "Kingmaker" என்ற பெருமைக்குரிய அடைமொழியைப் பெற்றார்.
"பச்சைத் தமிழன்" என்று பெரியாராலும், "மக்கள் தலைவர்" என்று பண்டித நேருவாலும் பாராட்டப்பெற்ற மாமனிதர் அவர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பல்லாண்டுகள் பணியாற்றிய காமராசர் உயிர்நீத்தபோது, அவரிடமிருந்தவை வெறும் நூற்றுச் சொச்சம் உரூபாய்களே. 
காமராசரின் எளிய வாழ்வைக் கண்டு நெஞ்சுநெகிழ்ந்த கவியரசு கண்ணதாசன், தாம் இயற்றிய 'காமராசர் தாலாட்டில்'
"தங்கமே தண்பொதிகைச் சாரலே தண்ணிலவே
சிங்கமே என்றழைத்துச் சீராட்டும் தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே!"
என்று நெக்குருகிப் பாடினார்.
காமராசரின் ஒப்பற்ற பொதுப்பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு 1976-ஆம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய விருதான ’பாரத் ரத்னா’வை (அவரது மறைவுக்குப் பின்) வழங்கிப் பெருமைப்படுத்தியது.
காட்சிக்கு எளியராய், ஏழைக் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்த ஏந்தலாய், முறைசெய்து மக்களைக் காக்கும் இறையாய்த் திகழ்ந்த கர்மவீரர் காமராசர், நானிலம் போற்றும் நல்லாட்சியை நமக்களித்துச் சென்ற செம்மல். அதிகாரம் என்பது ஆடம்பரத்திற்கன்று; மக்கள் பணிக்கே என்பதைத் தம் வாழ்நாள் முழுவதும் நிரூபித்த அவர், தலைமுறைகள் தாண்டித் தமிழர்களின் இதயங்களில் நிலைத்திருப்பார்.
அன்னாரின் பிறந்தநாளான இன்று, நன்றியுடனும் பெருமிதத்துடனும் அவரை நினைவுகூர்ந்து போற்றுவோம்! 🙏

 

~மேகலா இராமமூர்த்தி
 

Leave a comment

Comment